சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது: கஜேந்திரகுமார் எம்.பி நாடாளுமன்றில் தெரிவிப்பு!

தாம் சட்டரீதியற்ற வகையில் கைது செய்யப்பட்டதன் மூலம் தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று சிறப்புரிமை ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பிய நிலையில் அவர் அறிக்கை ஒன்றை முன்வைத்தார்.

அதில் மருதங்கேணியில் கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள், இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் குறித்து அவர் விளக்கமளித்தார்.

அத்துடன் தாம் சபாநாயகரை தொடர்புகொண்ட போதும், அவரின் தொடர்பு கிடைக்காமையால், பிரதி சபாநாயகருடன் தொடர்பு கொண்டு, நாடாளுமன்றில் சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பிய பின்னர், மருதங்கேணி காவல்துறையில் 12ஆம் திகதியன்று வாக்குமூலம் வழங்க உடன்பட்டதாக கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

எனினும் இதனை புறக்கணிக்கும் வகையில் தம்மை நேற்று காலை மருதங்கேணி காவல்துறை அதிகாரிகள், கொழும்பில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்ததாக கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.

தாம் கைது செய்யப்படுவதற்கு முன்னர் சபாநாயகரை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியதாகவும், இதன்போது, கைதுக்கான நீதிமன்ற உத்தரவு சமர்ப்பிக்கப்படாவிட்டால், நாடாளுமன்றத்துக்கு வந்து சிறப்புரிமை பிரச்சினையை எழுப்புவதை காவல்துறை தடுக்கமுடியாது என்று சபாநாயகர் உறுதியளித்திருந்தார்.

எனினும் அதனையும் மீறி பொலிஸாரின் உயர்மட்ட கட்டளையின்படி தாம் கைது செய்யப்பட்டதாக கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.

எனவே தமது கைது சட்டவிரோதமானது என்றும் இது தொடர்பில் சபாநாயகர் உரிய செயற்பாட்டை முன்னெடுக்கவேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்தார்.

இந்தநிலையில் கஜேந்திரகுமாரின் அறிக்கைக்கு தாம் பதில் வழங்கப்போவதில்லை என்றும் இந்த விடயம், நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன உறுதியளித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews