தியாகி சிவகுமாரன் தொடர்பில் கருத்து தெரிவித்த ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம்…!

ஆனி 5ம் திகதி உரும்பிராய் சிவகுமாரனின் 49 வது நினைவு தினம். தனது 24வது வயதில் சிவகுமாரன் மரணமடைந்தான். அவன் உயிரோடு இருந்திருந்தால் தற்போது 73 வயதாகி இருக்கும். ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பகர்த்தா அவன் தான். சயனட் அருந்தி முதன்முதலில் மரணமான போராளியும் அவன்தான். சிவகுமாரனை நினைவு கூறுவதன் மூலம் தமிழ் தேசிய அரசியல் வரலாற்றையும் அதற்கு பங்களித்தவர்களையும் நாம் நினைவு கூருகின்றோம்.
சிவகுமாரன் 1950ம் ஆண்டு ஆவணி மாதம் 26ம் திகதி ஆசிரியர் பொன்னுத்துரைக்கும் அன்னலட்சுமிக்கும் மகனாகப் பிறந்தான். ஆரம்பக் கல்வியை உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்திலும், இடைநிலைக்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும், தொழில் நிலைக்கல்வியை கொக்குவில் தொழில்நுட்பக்கல்லூரியிலும் பயின்றான்.
சிவகுமாரன் முதலில் கவனம் செலுத்தியது சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் தான். தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்த அக்கால இளைஞர்களிடையே சாதி முரண்பாடு தொடர்பாக இரண்டு கருத்துக்கள் இருந்தன. ஒன்று இது அற நெறிகளுக்கு முரணானது, இரண்டாவது தமிழ்த்தேசிய அரசியலை சாதி முரண்பாடு பலவீனப்படுத்தும். இவை தவிர இந்த விவகாரத்தை கோட்பாட்டு ரீதியில் விளங்கிக் கொண்டார்கள் எனக் கூற முடியாது. இடதுசாரிகளின் குறிப்பாக சண்முகதாசன் தலமையிலான சீனச்சார்பு கம்யூனிஸ்கட்சியின் சாதி ஒழிப்புப் போராட்டங்களும் இவர்களைப் பாதித்திருந்தன. அக்கட்சியின் வெகுஜன அமைப்பான தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் அறுபதுகள் முழுவதும் ஆலயப்பிரவேசப் போராட்டங்களை நடாத்திக் கொண்டிருந்தது. மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் போராட்டம், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் போராட்டம் என்பன இக்காலத்தில் தான் இடம்பெற்றன. பொங்கல் பானைக்குள் கைக்குண்டு கொண்டு சென்று மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவிலில் எறியப்பட்டது. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் தேர் எரியூட்டப்பட்டது.
இந்தப் போராட்டங்கள் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களை வெகுவாகப் பாதித்தது. அடித்தள மக்கள் மத்தியில் அரசியல் பணியை மேற்கொள்ளச் சென்றால் அங்கெல்லாம் சாதி ஒடுக்குமுறைக்கு பதில் சொல்ல வேண்டியிருந்தது. அதுவும் சிவகுமாரனின் ஊரான உரும்பிராய் கோப்பாய் தொகுதிக்குள் இருந்தது. கோப்பாய் தொகுதி தான் குடாநாட்டிலேயே சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகளவில் வாழும் தொகுதி. உரும்பிராய் கிராமத்தை சுற்றவர சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களே வசித்தனர். சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக “நீண்டபயணம்” என்ற நூலை எழுதிய செ.கணேசலிங்கமும் உரும்பிராயைச் சேர்ந்தவரே!
1960 களிலும் 1970 களிலும் தமிழ்த்தேசிய செயற்பாட்டில் அதிகம் பங்குபற்றிய கிராமங்கள் என்றால் வல்வெட்டித்துறையும், உரும்பிராயும் தான். வல்வெட்டித்துறை தமிழ்த்தேசிய அரசியலின் செயற்பாட்டுத்துறையில் அதிக அக்கறை செலுத்தியதே தவிர கோட்பாட்டு துறையில் அதிக அக்கறை செலுத்தியது எனக்கூற முடியாது. கோட்பாட்டுத்துறையில் வலுவான அக்கறை செலுத்திய கிராமங்களில் முக்கியமான கிராமம் உரும்பிராய் ஆகும். தமிழ் மாணவர் பேரவையின் தலைவர் சத்தியசீலன், தமிழ்த்தேசிய கோட்பாட்டாளரான மகா உத்தமன் போன்றவர்களும் உரும்பிராயைச் சேர்ந்தவர்களே!
கோப்பாய்த்தொகுதியை தமிழ்த்தேசிய அரசியலின் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்க வேண்டுமென்றால் சாதி ஒழிப்பிலும் அக்கறை செலுத்த வேண்டியிருந்தது. தமிழரசுக்கட்சியின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களான கு.வன்னியசிங்கம், கதிரவேற்பிள்ளை ஆகியோரும் சாதி ஒழிப்பில் அதிக அக்கறை செலுத்தினர்.
சிவகுமாரன் 1960 களின் பிற்பகுதியில் சாதி ஒழிப்புப் போராட்டத்தில் கவனம் செலுத்தினான். 1968 ம் ஆண்டு பங்குனி மாதம் 02 ம் திகதி 18 வயதாக இருக்கும் போது உரும்பிராய் ஞானவைரவர் கோயிலடியில் சமபந்தி போசனத்தை நடாத்தினான். பறை மேளங்கள் மரண வீட்டில் அடிப்பதையும் தடுத்து நிறுத்தினான். ஊரில் உள்ள அந்த சமூகத்தினரோடு பேசி பறை மேளங்களை உரும்பிராய் சந்தியில் வைத்து போட்டு உடைத்து எரியூட்டினான். பறை மேளத்தை வைத்து சமூகத்தின் ஒரு பிரிவினரை இழிவுபடுத்துவதே இந்த எரியூட்டலுக்கு காரணம். பறை தமிழ் மக்களுடைய பாரம்பரிய இசை என்ற புரிதல் அந்த நேரம் சிவகுமாரனிடம் இருக்கவில்லை. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் ஆலய பிரவேச போராட்டத்திலும் பங்கு பற்றினான். இந்த செயற்பாட்டில் உரும்பிராயைச் சேர்ந்த வினோபா, சேகரம் அண்ணர் (இவர் பின்னர் பிரபாகரனுடன்; இணைந்து பணியாற்றியவர்) சற்குணம் ஆகியோரும் பங்களித்தனர். உரும்பிராயில் ஒரு இளைஞர் கூட்டம் சிவகுமாரனுக்கு பின்னால் நின்றது எனக் கூறலாம்.
1970 களில் தேசியப்போராட்டம் நோக்கி சிவகுமாரனின் கவனம் திரும்பியது. இதிலும் சிவகுமாரனின் நம்பிக்கை இரண்டு தான் ஒன்று தமிழீழமே தீர்வு, இரண்டாவது ஆயுதப்போராட்டமே அதற்கான வழிமுறை. சிவகுமாரனின் முதலாவது ஆயுத நடவடிக்கை 1970ம் ஆண்டில் இடம்பெற்றது. உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்திற்கு நிகழ்வு ஒன்றிற்கு வருகை தந்த உதவி அமைச்சர் சோமவீர சந்திரசிறீயின் மோட்டார் வாகனத்திற்கு சிவகுமாரன் குண்டை எறிந்தான். இது தொடர்பாக படையினரால் கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் வரை சிறையில் இருந்தான். இது தொடர்பான வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் இடம்பெற்றபோது நீதிமன்றமே மக்களினால் நிரம்பியிருந்தது. சிவகுமாரன் குற்றவாளிகள் கூண்டில் ஏறியதும் வெளியில் இருந்த மக்களும் சிவகுமாரனை பார்ப்பதற்காக உள்ளே வரத்தொடங்கினர். அக்காலத்தில் சிவகுமாரன் தமிழ் மக்களின் ஹீரோ.
1970 களில் சிறீமா தலைமையிலான இடதுசாரிக்கட்சிகள் இணைந்த கூட்டு முன்னணி அரசாங்கம் ஆட்சியில் இருந்தது. இந்த அரசாங்கத்தின் சலுகைகளைப் பெறுவதற்காக தமிழர் பிரதேசங்கள் எங்கும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் கிளைகள் நிறுவப்பட்டன. உரும்பிராய் கிராமத்திலும் கிளை ஒன்று திறக்கப்பட்டது. சிவகுமாரனும் அவனுடன் இணைந்த இளைஞர்களும் இக்கிளை உரும்பிராயில் இருப்பதை விரும்பவில்லை. சிவகுமாரன் இரவோடு இரவாக கிளை அலுவலகத்தின் பெயர்ப்பலகையை கழட்டி உடைத்தெறிந்தான். இது தொடர்பாகவும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டான்.
சிவகுமாரனின் இரண்டாவது செயற்பாடு தமிழ் மாணவர் பேரவையோடு இருந்தது. 1970 ம் ஆண்டு கூட்டுமுன்னணி அரசாங்கம் உயர் கல்வியில் தரப்படுத்தல் முறையை அறிமுகப்படுத்தியது. பல்கலைக்கழக விஞ்ஞான பீடங்களில் அனுமதி பெறுவதற்கு தமிழ் மொழி மூல மாணவர்கள் கூடுதலான புள்ளிகளும் சிங்கள மொழி மூல மாணவர்கள் குறைந்த புள்ளிகளும் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. பல்கலைக்கழகங்களுக்கு குறிப்பாக மருத்துவ, பொறியியல் பீடங்களுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்திலேயே இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழ் மாணவர்கள் இதனை எதிர்ப்பதற்காக தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பை உருவாக்கினர். சிவகுமாரன் தமிழ் மாணவர் பேரவையின் மத்திய குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டான். பதியுதீன் முகமத் கல்வி அமைச்சராக இருந்தபோதே தரப்படுத்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழ் மாணவர் பேரவை தரப்படுத்தலை எதிர்த்து 1970 ம் ஆண்டு கார்த்திகை மாதம் 23 ம் திகதி பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தையும், கண்டன ஊர்வலத்தையும் நடாத்தியது. சிவகுமாரனும், முத்துக்குமாரசுவாமியும் (இவர் தற்போது அமெரிக்காவில் உள்ள சர்வதேச மன்னிப்பு சபையில் சட்டத்தரணியாக பணியாற்றுகின்றார். மாவட்ட நீதிபதியாக இருந்த தம்பித்துரையின் மகன். தமிழ் மாணவர் பேரவை மத்தியகுழு உறுப்பினர்களில் ஒருவர். நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்தவர். சிவகுமாரனின் முதலாவது சிலையைத் திறந்து வைத்தவரும் இவரே!) ஒலிபெருக்கி பூட்டப்பட்ட காரில் குடாநாட்டில் உள்ள பாடசாலைகளுக்கு சென்று ஊர்வலத்தில் கலந்து கொள்ளுமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தனர். இதன் போது கைது செய்யப்பட்டு எச்சரிக்கையுடன் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிகழ்வு பற்றி முத்துக்குமாரசுவாமி பின்வருமாறு கூறினார். “மாணவர் பேரவையின் ஊர்வலத்திலன்று சிவகுமாரனும் நானும் ஒலிபெருக்கி பூட்டப்பட்ட காரில் சென்று மாணவ மாணவிகளை பாடசாலைகளை பகிஸ்கரித்து நடக்கவிருக்கும் கண்டன ஊர்வலத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துக் கொண்டு வந்தோம். அப்போது அங்கே வந்த பொலிசார் என்னையும் சிவகுமாரனையும் கைது செய்து யாழ் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். எம்மை விசாரித்த பொலிஸ் அதிபர் எச்சரித்து விடுதலை செய்தார்.”
கொக்குவிலில் இருந்து ஊர்வலம் ஆரம்பமாகி யாழ்ப்பாணம் முற்றவெளியைச் சென்றடைந்தது. அங்கு கண்டனக் கூட்டம் இடம்பெற்றது. உணர்ச்சிகரமான ஊர்வலமாக இருந்தது. சுமார் பத்தாயிரம் வரை இளைஞர்கள் ஊர்வலத்தில் பங்குபற்றியிருந்தனர். பெருந்திரளாக இளைஞர்கள் பங்குபற்றிய முதலாவது கண்டன ஊர்வலம் இது தான்.
சிவகுமாரனின் மூன்றாவது செயற்பாடு யாழ்நகர மேஜர் அல்பிரட் துரையப்பா மீதான தாக்குதல் ஆகும். தமிழ் மாணவர் பேரவை தமிழர் தாயகத்தில் செயற்படும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியினரை எதிர்ப்பது எனத்தீர்மானித்தது. அல்பிரட் துரையப்பா சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளராக இருந்ததோடு யாழ் மாநகரசபையின் மேயராகவும் இருந்தார். 1971 ம் ஆண்டு பங்குனி மாதம் யாழ்ப்பாணம் 02 ம் குறுக்குத்தெருவில் வைத்து அல்பிரட் துரையப்பாவின் காருக்கு சிவகுமாரனால் கைக்குண்டு வீசப்பட்டது. காரிலிருந்து அல்பிரட் துரையப்பா குண்டு வெடிப்பதற்கு முன்னரே இறங்கியமையினால் தப்பியிருந்தார். கார் முழுமையாக வெடித்து சாம்பலானது. சிவகுமாரன் மீண்டும் கைது செய்யப்பட்டான். 22 மாதங்கள் அதாவது ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தான். சிவகுமாரன் கடும் சித்திரவதைகளை அனுபவித்தது இச்சிறைவாசத்தில் தான். அல்பிரட் துரையப்பா பின்னர் புலிகளினால் கொல்லப்பட்டார். இச்கொலையில் பிரபாகரன் நேரடியாகவே பங்கேற்றிருந்தார்.
சிவகுமாரனின் நான்காவது செயற்பாடு 1974 ம் ஆண்டு தை மாதம் முதல் வாரத்தில் இடம் பெற்ற நான்காவது உலகத்தமிழ் ஆராட்சி மாநாட்டில் முக்கிய செயற்பாட்டாளராக பங்கேற்பதாக இருந்தது. இம்மாநாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெறுவதை சிறீமா அரசாங்கம் விரும்பியிருக்கவில்லை. யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவும் விரும்பவில்லை. யாழ்மாநகர சபையின் கட்டுப்பாட்டில் இருந்த மண்டபங்கள் மாநாட்டிற்கு மறுக்கப்பட்டன. ஏற்பாட்டாளர்கள் யாழ்ப்பாணத்தில் நடாத்துவது என்பதில் உறுதியாக இருந்ததினால் இறுதி நேரத்தில் தான் சில மண்டபங்கள் வழங்கப்பட்டன.
சிவகுமாரனும் அவனுடன் இணைந்த இளைஞர்களும் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்திருந்த தமிழ் ஆராய்ச்;சி மாநாட்டின் செயலகத்திற்கு சென்று மாநாட்டு பொறுப்பாளர்களைச் சந்தித்து தாங்களும் பங்குபற்றக்கூடிய செயல்திட்டங்களை வகுக்கும்படி கோரினர். முதலில் பொறுப்பாளர்கள் மறுத்தனர். சிவகுமாரன் எங்களது பங்களிப்பு இல்லாது மாநாடு நடைபெற முடியாது என எச்சரித்தான். பின்னர் அவர்கள் இறங்கி வந்து சிவகுமாரனை பொறுப்பாளர்களில் ஒருவராகவும், ஏனைய இளைஞர்களை தொண்டர்களாகவும் சேர்த்துக் கொண்டனர். சிவகுமாரன் மாநாட்டின் வெற்றிக்காக இரவு பகலாக பணியாற்றினான். மாநாட்டு அரங்க ஒழுங்கு சிவகுமாரனிடம் ஒப்படைக்கப்பட்டது. காலை 8.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை சிவகுமாரன் பணியாற்றினான் என மாநாட்டுக்கு தலைமை வகித்த ஒருவரான மறவன்புலவு சச்சிதானந்தன் குறிப்பிட்டார்.
1974 ம் ஆண்டு தை மாதம் 09 ம் திகதி மாநாட்டின் அலங்கார ஊர்தியின் பவனி இடம்பெற்றது. 150 ஊர்திகள் வரை அதில் இணைந்திருந்தன. நல்லூர் சட்டநாதர் கோவிலில் இருந்து ஊர்தி தொடங்குவதாக இருந்தது. ஊர்திகள் இருபாலைச்சந்தி வரை நீண்டிருந்தன. ஊர்திகளை யாழ் பொலிஸ் அதிகாரி சந்திரசேகரா பார்வையிட்டார். அதில் வந்த பண்டாரவன்னியன் ஊர்தியை பவனியில் இருந்து அகற்றுமாறு வற்புறுத்தினார். இளைஞர்கள் அதற்கு இணங்கவில்லை. சிவகுமாரனும் இளைஞர்களும் பண்டாரவன்னியன் ஊர்தியை அகற்றினால் பவனியை நடாத்த விட மாட்டோம் என வீதியை மறித்து மறியல் செய்தனர். இறுதியில் சந்திரசேகரா இறங்கி வந்து பண்டாரவன்னியன் ஊர்தி செல்வதற்கு வழிவி;ட்டார்.
தமிழ் ஆராய்ச்;சி மாநாட்டின் பத்தாம் நாள் மாநாட்டில் பங்குபற்றிய கலைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு மக்கள் பெரும் திரளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படவில்லை. வீரசிங்கம் மண்டபம் போதாமல் இருந்தது. சிவகுமாரனும் இளைஞர்களும் மண்டபவாசலில் தற்காலிக மேடை அமைத்து நிகழ்வை நடாத்தினர். அப்போது  தான் பொலிஸ் அதிகாரி சந்திரசேகரா தலைமையில் வந்த பொலிசார் துப்பாக்கி பிரயோகம் நடத்தினர். மின்சார வயர் அறுந்து விழுந்தது. 14 வயது சிறுவன் உட்பட 7 பேர் கருகி மாய்ந்தனர். சிவகுமாரன் இந்நிகழ்வை நேரடியாகவே பார்த்தான். அன்றே பழிக்குப்பழி வாங்குவது எனத்தீர்மானித்தான். அனைத்து மக்களும் வெளியேறும் வரை மண்டப வாசலிலே பித்துப்பிடித்தவன் போல நின்றான். இரண்டு தீர்மானங்களை எடு;த்தான் ஒன்று பழிக்குப்பழி வாங்குவது. இரண்டாவது படையினரிடம் உயிருடன் பிடிபடுவதில்லை.
அன்று இரவே வீட்டிற்கு செநல்வதற்கு முன் நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர் அருளம்பலத்தின் வீட்டிற்கு காவலுக்கு நின்ற பொலிசார் மீது தன்னந்தனியாக கைக்குண்டை வீசினான். சிவகுமாரனைத் தேடும் படலம் ஆரம்பமாகியது. தொடர்ந்து நல்லூர் கைலாசபிள்ளை கோயிலடியில் வைத்து பொலிஸ் அதிகாரி சந்திரசேகரா மீது குண்டு வீசினான். தன்னிடமிருந்த கட்டுத்துவக்கினாலும் அவரை நோக்கி துப்பாக்கிச்சூட்டை நடாத்தினான் ஆனால் வெற்றி கிடைக்கவில்லை.
இதன் பின்னர் கடும் தேடலுக்கு உட்பட்டான். உரும்பிராய் கிராமம் பல தடவைகள் சுற்றிவளைப்பிற்கு உள்ளாக்கப்பட்டது. சிவகுமாரனின் தலைக்கு படையினரால் விலையும் பேசப்பட்டது. இந்நிலையில் தான் சிவகுமாரனின் நண்பர்கள் சிவகுமாரனை இந்தியாவுக்கு அனுப்ப முடிவு செய்தனர். பலரிடம் நிதி உதவி கேட்கப்பட்டது. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் 5000 ரூபா உதவி கேட்கப்பட்டது. அவரும் கையை விரித்தார். இறுதியில் கோப்பாய் கிராம வங்கியைக் கொள்ளையிடுவது என சிவகுமாரனும் நண்பர்களும் தீர்மானித்தனர்.
அக் கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்தது. சிவகுமாரன், பிரான்சிஸ் (கவிஞரும் எழுத்தாளருமான கி.வி.அரவிந்தனே இவர்) ஜீவராசா, மகேந்திரன் ஆகிய நால்வரே இம்முயற்சியில் ஈடுபட்டனர். தோட்ட வெளிக்குள்ளால் தப்பி ஓடிய போதே சிவகுமாரன் கைது செய்யப்படான் கைது செய்யப்பட்டவுடன் தன் கைவசம் வைத்திருந்த சயனட் திரவத்தை அருந்தினான். யாழ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பின் மரணமானான். கூடவே மகேந்திரனும், ஜீவராசாவும் கைது செய்யப்பட்டனர். பிரான்சிஸ் தப்பி ஓடி தலைமறைவாகினார். இவர் பின்னர் ஈரோஸ் இயக்கத்தில் “சுந்தர்” என்ற பெயரில் செயலாற்றினார். ஈரோஸ் இயக்கம் புலிகள் அமைப்புடன் இணைந்ததைத் தொடர்ந்து அரசியல் செயற்பாட்டில் இருந்து விலகி பிரான்சில் வசித்தார். பல அரசியல் , இலக்கிய பணிகளில் ஈடுபட்டு சில வருடங்களுக்கு முன்னர் மரணமானார்.
சிவகுமாரனின் மரணத்திற்கு பின்னர் போராட்டம் வானளவு உயர்ந்தது. உலகமே வியக்கும் வண்ணம் முப்படைகளையும் அமைத்தது.
இந்த வளர்ச்சிக்கு அச்சாணி சிவகுமாரன் தான்!
அவனது நினைவுகூரலில் இந்த விடயம் தான் முக்கியமானது.

Recommended For You

About the Author: Editor Elukainews