பிரதமர் அலுவலகத்திற்கு தவறான தகவல்: வவுனியா பிரதேச செயலாளருக்கு எதிராக முறைப்பாடு

பிரதமர் செயலகத்திற்கு தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளதால் தனது நடமாடும் சுதந்திரம் உட்பட தனது உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக செயற்பாட்டாளர் ஒருவர் வவுனியா பிரதேச செயலாளருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் காணியற்ற அரச ஊழியர்களுக்கு காணி வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்டவர்களில் பலர் அதற்கு தகுதியற்றவர்கள் என தெரிவித்து பிரதேச செயலாளருக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜனாதிபதி, பிரதமர் உட்பட உயர் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் தெரியப்படுத்தியிருந்தார்.

இதன் பிரகாரம் பிரதமரின் செயலாளர் குறித்த முறைப்பாட்டாளருக்கு 14 நாட்களுக்குள் விளக்கம் கொடுக்குமாறு தெரிவித்ததுடன், பிரதமர் செயலகத்திற்கும் அறிவிக்குமாறும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வவுனியா பிரதேச செயலகத்தினால் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறித்த முறைப்பாட்டாளர் பொலிஸ் உத்தியோகத்தர் என தெரிவித்துள்ளதுடன், அவரது குடும்பத்தினர் மற்றும் சகோதரர் தொடர்பிலும் குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

எனினும் முறைப்பாட்டாளர் தனியார் துறையில் பணியாற்றி வரும் நிலையில் தன்னை பொலிஸ் உத்தியோகத்தர் என தெரிவித்துள்ளமையானது தனது தொழிலுக்கு ஆபத்தானது எனவும் அது தனது தொழில் அந்தஸ்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனக்கு உரிமை மீறப்படுவதற்கு பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் காரணமாகியுள்ளதாகவும் தெரிவித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த முறைப்பாட்டாளர் சட்ட நடவடிக்கை எடுக்கவும் முனைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews