மே தினத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ள பேரணிகள்!

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தின பேரணிகள் கொழும்பு மற்றும் கண்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளன.
அதன்படி, சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினப் பேரணி நாளை மாலை பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி கொழும்பு ஏ.இ.குணசிங்க மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், சுதந்திர மக்கள் முன்னணியின் பேரணி கண்டியிலும் நடைபெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டம் கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிலும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பேரணி கண்டியிலும் நடைபெறவுள்ளது.
இதேவேளை, சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமது தொழிற்சங்கத்தால் வருடாந்தம் பிரமாண்டமான முறையில் நடத்தப்படும் பிரதான மேதின பேரணியும், கூட்டமும் இம்முறை நடத்தப்பமாட்டடாதென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
எனினும், தோட்டவாரியாக மிகவும் எளிமையான முறையில் மே தின நிகழ்வுகளை நடத்துமாறு தோட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தமது மே தினக் கூட்டத்தை பதுளையில் நடத்தவுள்ளதாக, அதன் செயலாளர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விசேட போக்குவரத்து திட்டத்துடன் நாளை கொழும்பு மற்றும் கண்டியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுலில் இருக்கும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ அறிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews