தனியார் பஸ் போக்குவரத்துச் சேவை நாளைய தினம் வழமைக்கு திரும்பும் -கெமுனு விஜேவர்தன

இலாப நோக்கத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தாம் பொதுப்போக்குவரத்து சேவையை முன்னெடுக்கவில்லை என்றும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் நூற்றுக்கு 20 சதவீதமான தனியார் பஸ்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டன.

புதுவருடப் பிறப்பன்றும் தனியார் பஸ் சேவையானது மட்டுப்படுத்தப்பட்டளவில் முன்னெடுக்கப்பட்டது.

இதற்காக தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் சாரதிகள், நடத்துனர்களுக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இலாப நோக்கத்தை அடிப்படையாக வைத்து நாம் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடவில்லை என்பதை நான் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இன்றைய தினம் நூற்றுக்கு 50 சதவீதமான பஸ்களை சேவையில் ஈடுபடுகின்றன.

கொழும்பு போன்ற பிரதேசங்களில் மட்டுப்படுத்தப்பட்டளவிலான பஸ்களே சேவையில் ஈடுபடுகின்றன.

பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றது. இன்னும் கொழும்பு தலைநகரம் வழமைக்கு திரும்பவில்லை. அதேபோன்று சாரதிகளுக்கு, நடத்துனர்கள் மற்றும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான வருமானம் இந்த நாட்களில் குறைவாகவே காணப்படுகின்றது. இவற்றைக் கருத்திற்கொண்டே கொழும்பு போன்ற பிரதேசங்களில் மட்டுப்படுத்தப்பட்டளவிலான பஸ் சேவை முன்னெடுக்கப்படுகின்றது.

சாரதிகள் உணவு உண்பதற்கு வழியில்லை. ஏனெனில் உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. அதேபோன்று மலசலகூட வசதிகளும்; இல்லாமல். எமது சாரதிகள் உணவகங்களில் உள்ள மலசலகூடங்களையே பயன்படுத்துகின்றனர்.

நாளைய தினம் உணவகங்கள் என்பன திறக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

அதேபோன்று நாளைய தினம் பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. எனவே பஸ் போக்குவரத்து வழமைக்கு திரும்பும்.

நாளைய தினம் அரச அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் திறக்கப்படும் என்பதால் பொதுப்போக்குவரத்து சேவை வழமைக்கு திரும்பும்.

Recommended For You

About the Author: Editor Elukainews