யாழ். கருவாட்டுகடைகளில் சுகாதார பரிசோதகர்கள் அதிரடி பரிசோதனை!

இன்றையதினம் (12.04.2023) புதன்கிழமை யாழ். நகர் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள கருவாட்டுகடைகள், யாழ். மாநகர சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பாலமுரளி அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் யாழ். நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் மற்றும் மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது தெருவோரம் தூசுக்கள், மாசுக்களால் மாசடையக்கூடிய வகையில் கருவாடுகள் வைத்திருந்த கடை உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டனர். தெருவோரம் கருவாடுகள் வைத்து விற்பனை செய்வதாயின் கண்ணாடி பெட்டிக்குள் வைத்து விற்பனை செய்வதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.
அத்துடன் கருவாடுகளை தூசு படியும் வகையிலும், அழுக்கான துரு படிந்த கம்பிகளிலும் குத்தி தொங்கவிடப்பட்டிருந்த கடை உரிமையாளர்களுக்கும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது.
கருவாடுகள் அனைத்தையும் பொலித்தீனால் மூடி தூசுக்கள் படாதவாறு காட்சிப்படுத்துமாறும் பொது சுகாதார பரிசோதகர்களால் அறிவுறுத்தப்பட்டது.
மேற்படி குறைபாடுகள் நிவர்த்தி செய்வதற்கு இரண்டு வாரகால அவகாசம் வழங்கப்பட்டதுடன், கால அவகாசத்தின் பின்னரும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யாத வர்த்தகர்களிற்கெதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்களால் தெரிவிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews