யாழ். வடமராட்சி பகுதிக்கு அமைச்சர் ஜீவன், கண்காணிப்பு விஜயம்

வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கடல் நீரைச் சுத்திகரித்து, நன்னீராக்கும் திட்டத்தை 2024 முற்பகுதிக்குள் முழுமைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், வவுனியா நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் வவுனியா பேராறு நீர் வழங்கல் திட்டத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்திற்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், வவுனியா பேராறு நீர் வழங்கல் திட்டம், வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கடல் நீரை சுத்திகரித்து நன்னீராக்கும் திட்டங்களை பார்வையிட்டதுடன், அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.

திட்டங்களின் தற்போதைய நிலவரம் மற்றும் விஸ்தரிப்புக்கான தேவைப்பாடுகள் பற்றி கேட்டறிந்த அமைச்சர், குறித்த அறிவிப்பை விடுத்தார்.

வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கடல் நீரை சுத்திகரித்து நன்னீராக்கும் திட்டத்தினூடாக, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கரவெட்டி, கொடிகாமம் மற்றும் புத்தூர் என பல பிரதேசங்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

‘நீர்வழங்கல் திட்டத்தை 2023 ஏப்ரலில் முடிவுறுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை மற்றும் பணவீக்கத்தால் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், 2024 முற்பகுதிக்குள் இத்திட்டத்தை முழுமைப்படுத்த எதிர்பார்க்கின்றோம். இத்திட்டம் ஊடாக 3 லட்சம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கும்’ என அமைச்சர் கூறினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews