ஆறுமுகநாவலர் பெருமானை ஆணையாளர் மதித்து நடக்கவேண்டும் -கொழும்பு நாவலர் சபை வலியுறுத்து

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரை யாழ் மாநகர ஆணையாளர் மதித்து செயல்பட வேண்டுமென  ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்குரிய நாவலர் கலாசார மண்டபத்திலே நாவலர் பணியை நாவலர் பெருமான் பிறந்த இருநூறாவது அகவை ஆண்டு நிறைவுடன் முன்னெடுத்த வண்ணம் உள்ளது.
பல இழுபறிகளுக்குப் பின்னர் இரு தரப்பு ஒப்புதல்களோடு நாவலர் கலாசார மண்டபத்திலே இணைந்த பணியை முன்னெடுப்பது என்ற முடிவின் அடிப்படையில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் யாழ் மாநகர சபை நிர்வாகமும் இணைந்து செயற்படுவது என்ற முடிவு எட்டப்பட்டிருந்தது.
யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர்களான இ. ஆனோல்ட், வி. மணிவண்ணன் முதலானோர் இச்செயற்பாடுகளுக்குத் துணை நின்றனர்.
 யாழ் மாநகர ஆணையாளர் அவர்களின் நடவடிக்கை தான்தோன்றித் தனமாகவும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் நாவலர் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துவருவது வருத்தத்திற்குரியது.
கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு நாவலர் கலாசார மண்டபத்திலே நடைபெற்ற நிகழ்வொன்றிற்காக. யாழ் மாநகர சபை ஆணையாளர் அவர்களின் உத்தரவின்பேரில் சைவத்தையும் தமிழையும் வளர்த்த ஒரு தேசிய வீரரை அவருக்கென்று அமைக்கப்பட்ட கலாசார மண்டபத்திலேயே அவமதிக்கும் விதத்தில் நாவலர் பெருமானின் திருவுருவப் படம் கழற்றப்பட்டு ஒரு மூலையில் போடப்பட்டது.
இந்த அநாகரிகச் செயற்பாட்டுக்கு உரிய தரப்பினரால் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் ஏற்கனவே இணங்கிய வகையில் நாவலர் கலாசார மண்டபத்திலே இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் சுதந்திரமான முறையில் நாவலர் பணியை முன்னெடுப்பதற்கும் யாழ் மாநகர சபை பொதுநூலகத்தை நாவலரது ஞாபகார்த்த நூலகமாக யாழ் மாநகர சபை செயற்படுத்துவதற்கும் உரியதரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஆகவே நாவலர் கலாசார மண்டபம் உருவாக பலவழிகளிலும் துணைநின்ற ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் எதிர்பார்ப்பினை உரியவர்கள் மதித்து நடக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என நாவலர் சபையின் தலைவர் சின்னத்துரை தனபாலன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews