அரசியல் கைதியின் விடுதலை – குரல் அற்றவர்களின் குரல் ஊடக அறிக்கை

சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான, அரசியல் கைதி விவேகானந்தனூர் சதீஸ், பொதுமன்னிப்பில் விடுதலை!

சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான செல்லையா சதீஸ்குமார் என்ற விவேகானந்தனூர் சதீஸ், கடந்த 15 ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாக சிறைப்படுத்தப்பட்டிருந்தார் . இவருக்கு, பெப்ரவரி – 01 ஆம் திகதி ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய சதீஸ்குமார், ஏற்கனவே உச்ச நீதிமன்றில் செய்யப்பட்டிருந்த மேல் முறையீட்டு மனுவினை மீளப் பெற்றுக்கொள்வதற்கான தனது ஒப்புறுதியினை பெப்ரவரி-23 அன்று சட்டத்தரணிக்கூடாக மன்றுக்கு சமர்ப்பித்திருந்தார்.

அதனையடுத்து, மனுதாரரின் மேல் முறையீட்டு மனுவினை மீளளித்த உச்ச நீதிமன்றம், குறித்த வழக்கினை
முடிவுக்குக் கொண்டுவந்திருந்தது. எனினும், மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நீதி நிருவாகச் செயற்பாடுகள் காலதாமதம் ஆனதால், தமிழ் அரசியல் கைதியான சதீஸ்குமார் இன்றைய தினமே(17.03.2023.)
கொழும்பு- புதிய மகசின் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

விவேகானந்த நகர் கிழக்கு, கிளிநொச்சியை வாழ்விடமாகக் கொண்ட சதீஸ்குமார், நெருக்கடிகள் மிகுந்த யுத்த காலங்களில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி ஓட்டுநராக உயிர் காப்புப் பணியில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றி வந்திருந்தார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு பணியின் நிமித்தம் கிளிநொச்சி வைத்திசாலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போது, வவுனியா- தேக்கவத்தை சோதனைச் சாவடியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சதீஸ்குமாருக்கு எதிராக, விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவியதாக குற்றப்பத்திரம் தயாரித்து வவுனியா மேல் நீதிமன்றில் அவசரகாலச் சட்டவிதியின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.

குறித்த வழக்கினை விசாரித்த நீதிமண்றம், 2011ஆம் ஆண்டு, சதீஸ்குமார்க்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. அதனையடுத்து, வழக்கின் தீர்ப்பை ஆட்சேபித்து கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் எதிராளி மேல் முறையீடு செய்திருந்தார். எனினும், வவுனியா மேல் நீதிமன்றின் தண்டனைத் தீர்ப்பை மேல் முறையீட்டு நீதிமன்றமும் மீளுறுதிப்படுத்தி வழக்கை முடிவுறுத்தியது.

இறுதியாக, 2017ஆம் ஆண்டு வழக்கின் தீர்மானத்தை மீளவும் உச்ச நீதிமன்றில் மேல் முறையீடு செய்த சதீஸ்குமார், நீதி நிவாரணத்தைக் கோரி காத்திருந்தார். இந்த நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் சதீஸ்குமாருக்கு பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews