இராவணேஸ்வரனுடன் தொடர்புடைய கன்னியா வெந்நீர் ஊற்றுக்களை பௌத்த மதத்தோடு இணைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது…!அங்கஜன்

இராவணேஸ்வரனுடன் தொடர்புடைய கன்னியா வெந்நீர் ஊற்றுக்களை பௌத்த மதத்தோடு இணைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
அவரது உத்தியோகபூர்வ சமூக ஊடகம் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்தார். அதில் மேலும் உள்ளதாவது,
இதிகாசங்களில் திருகோணமலை கன்னியா ஏழு வெந்நீர் ஊற்றுகளை இராவண மன்னன் உருவாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கன்னியா வெந்நீர் ஊற்றுக்களை பார்வையிட செல்வோருக்கு தொல்லியல்  திணைக்களத்தால் தற்போது வழங்கப்படுகின்ற கட்டணச் சிட்டையில், தொல்லியல் சான்றுகளின் படி வெந்நீர் ஊற்று அநுராதபுர காலத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும், இது பௌத்த வளாகத்தில் அமைந்துள்ளது எனவும் எழுதப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
கன்னியா வெந்நீர் ஊற்றுக்களானது அநுராதபுர காலத்துக்கும் முற்பட்ட இராவணேஸ்வர மன்னன் காலத்து பழமையானது என இதிகாசங்கள் குறிப்பிடுகின்றன.
சிவபெருமானின் தீவிர பக்தனாக இருந்த இராவணன் திருகோணமலையில் குடிகொண்டிருக்கும் திருகோணேஸ்வரர் கோயிலுக்கு சென்றபோது, அங்கு வீற்றிருந்த சிவலிங்கத்தைக் கண்டு வியந்து அந்த லிங்கத்தை அவனின் தாயின் வணக்கத்திற்காக கொண்டு செல்ல விரும்பினான். இதனால் பாறையின் மீது இருந்த  சிவலிங்கத்தை தனது வாளால் வெட்டி பெயர்த்து எடுக்க முற்பட்டான்.
இதனால் கடும் கோபம் கொண்ட சிவன் அந்த  பாறையை தனது காலால் அழுத்தியதால் இந்த பாறைக்குள் சிக்குண்டான் இராவணன். இதைக்கேள்வியுற்ற அவன் தாய் தனது மகன் இறந்து விட்டதாக எண்ணி அதிர்ச்சியில் உயிரிழந்தாள். ஆனால், இராவணனோ இறக்கவில்லை. சிவனை பிரார்த்தனை செய்து தாம் செய்த செயலை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டான். தனது பக்தனைச் சிவனும் மன்னித்தார்.
கோணநாயகரிடம் பெற்ற லிங்கத்தை கையிலேந்திக் கொண்டு இராவணன் செல்லும்போது, விஷ்ணு அந்தண வடிவம் எடுத்து இராவணனைச் சந்தித்து தாயார் உயிர் நீத்த செய்தியைத் தெரிவித்தார்.
இதைக் கேட்டதும் இராவணன் துக்கக் கடலில் மூழ்கினான். அந்தணன் அவரைத் தேற்றியபின், இறுதிக் கிரியைகளைச் செய்யுமாறு நினைவுறுத்தி, இப்புண்ணிய தலத்தில் கருமாதிக் கிரியைகளைச் செய்தால் அவர் மோட்சத்தை அடைவது திண்ணம் என்று கூறினார். ஈமக்கிரியைகளை அந்தணரையே செய்யச் சொல்லி இராவணன் வேண்ட, அதற்குச் சம்மதித்த அந்தணர் இராவணனை அழைத்துக் கொண்டு திருகோணமலைக்கு மேற்கிலுள்ள கன்னியா என்னும் தலத்திற்குச் சென்று, அவ்விடத்தில் தமது கையில் இருந்த தடியினால் ஏழு இடங்களில் ஊன்றினார்.
அந்தண வடிவம் கொண்டு மகாவிஷ்ணு ஊன்றிய ஏழு இடங்களில் நீரூற்றுக்கள் தோன்றின எனப் புராணங்கள் கூறுகின்றன. இவ்விடத்தில் அந்தியேட்டி கடமைகள் செயப்படின் அவ்வான்மாக்கள் முத்தியடையும் என்று இந்துக்களால் காலங்காலமாக நம்பப்படுகிறது.
இவ்வாறு தமிழர்களுக்கே உரித்தான வரலாற்றுப் பொக்கிசங்களுள் ஒன்றான கன்னியா வெந்நீரூற்றை பௌத்த அடையாளங்கள் ஊடாக அபகரிக்க நினைப்பது, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சிதைக்கும் செயலாகவே கருத வேண்டியுள்ளது. ஒரு இனத்தின் தார்ப்பரியத்தை அடியோடு நீக்கும் நோக்கோடு இலங்கை தொல்லியல் திணைக்கம் தொடர்ந்து செயற்படுவதாகவே நாம் கருதுகின்றோம் – என்றுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews