ஆசிரியர் சங்கங்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

எதிர்வரும் 15 ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இன்று முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கிய வகையில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், வரி அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்களும் இன்று (09) முதல் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
இதனிடையே, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு மற்றும் வரிச் சுமைக்கு எதிராகவும் மருந்துப் பற்றாக்குறைக்குத் தீர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தும், பல சுகாதார நிபுணர் சங்கங்கள் ஆரம்பித்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டம், இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்தது.
வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் பல வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன.
அத்துடன், சம்பள முரண்பாடு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடுகளுக்கான கொடுப்பனவுப் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பல ஆசிரியர் சங்கங்கள் நேற்றுகல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவை சந்தித்தன.

Recommended For You

About the Author: Editor Elukainews