யாழில் பெண் அரச அதிகாரிக்கு எதிராக சுகாதாரப் பிரிவினரால் வழக்கு தாக்கல் !

பெண் அரச அதிகாரி ஒருவர் கோவிட்-19 நோய்த்தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் தடுப்பு நடவடிக்கைக்கு அரச அலுவலகர் ஒத்துழைப்பு வழங்காததால் நீதிமன்றக் கட்டளையை அரியாலை பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பெற்றுக்கொண்டுள்ளார்.
நாட்டின் நடைமுறையில் உள்ள சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் கடமைக்கு ஒத்துழைக்கவேண்டும், அவரினால் கோரப்படும் விவரங்கள் வழங்கப்படவேண்டும் என்று யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியுள்ளது. மாகாண அமைச்சு ஒன்றில் கடமையாற்றுபவருக்கு பெண் அதிகாரிக்கு அலுவலக மட்டத்தில் கடந்த 16ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. எனினும் அவரது தனிப்பட்ட முயற்சியினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று இல்லை என அறிக்கையிடப்பட்டுள்ளது.
இந்தக் குழப்பநிலையினால் பெண் அதிகாரியின் கணவரான அரச அலுவலகர் பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் கூறப்பட்ட சுயதனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பின்பற்றவும் குடும்ப விவரங்களையும் வழங்கவும் மறுத்துள்ளார்.
எனினும் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியினால் பெண் அதிகாரிக்கு தொற்றுள்ளதாக கடிதம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பெண் அதிகாரியின் கணவரையும் வீட்டில் உள்ளவர்களையும் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்கு அன்டிஜன் பரிசோதனைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் நேற்றுவரை சமுகமளிக்கவில்லை. அதனால் இன்று பரிசோதனையை முன்னெடுக்க வருகை தருமாறு சுகாதார மருத்துவ அதிகாரியினால் அழைக்கப்பட்டுள்ளனர். எனினும் இன்று சமுகமளிக்கவில்லை.
இந்த நிலையில் தமது கடமைக்கு ஒத்துழைக்கவில்லை, விவரங்களை வழங்கவில்லை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து அரச அலுவலகருக்கு கட்டளை வழங்குமாறு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் இன்று பொதுச் சுகாதார பரிசோதகரினால் விண்ணப்பம் செய்யப்பட்டது. விண்ணப்பத்தை ஆராய்ந்த மன்று, நாட்டின் நடைமுறையில் உள்ள சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் கடமைக்கு ஒத்துழைக்கவேண்டும், அவரினால் கோரப்படும் விவரங்கள் வழங்கப்படவேண்டும் என்று கட்டளை வழங்கியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews