யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை அகற்றுவது தொடர்பில் ஆராய்வு

கோம்பயன் மணல் இந்து மயானத்தில், யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டி அமைத்தல் தொடர்பில் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆராயப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மருத்துவ கழிவுகள் அகற்றப்படாது லொறிகளில் ஏற்றி வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரிப்பதற்கு யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட கோம்பயன் மணல் மயான பகுதியில் எடியூட்டி ஒன்றை அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன் அமைத்து செயற்படுத்துவது தொடர்பில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கோம்பயன் மணல் மயானம் இந்து மயானம் என்பதனால் இந்து மயான வளாகத்திற்குள் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதா என்பதை ஆராயுமாறு வடக்கு மாகாண ஆளுநர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் குறித்த விடயம் தொடர்பில் இன்றையதினம் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநரின் செயலாளர் தலைமையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதம பொறியியலாளர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews