அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மேலும் குறையும்

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைந்து வருகின்ற நிலையில் ஏப்ரல் மாதத்திற்குள் நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவும் குறையும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை கடனுதவி இலங்கைக்கு விரைவில் கிடைக்கும். நிதி கிடைத்தவுடன் பொருட்களின் விலைகள் குறையும்.

நாவலப்பிட்டி நகர சபைக்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி நாவலப்பிட்டி நகர சபையை அந்த வேட்பாளர்கள் கைப்பற்றுவார்கள். உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் அரசாங்கத்தை மாற்ற முடியாது.

தற்போதைய அரசாங்கம் இன்னும் 2 1/2 வருடங்கள் ஆட்சியில் இருக்கும், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்றார்.

பல வருடங்களாக மின்கட்டணம் அதிகரிக்கப்படாததால், மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருளைப் பெறுவதற்காகவே மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டதாகவும், நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்கு போதுமான எரிபொருள் மற்றும் எரிவாயுவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews