மகளிர் ரி-20 உலகக் கிண்ணம் – முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை அணித் தலைவி சமாரி அடப்பட்டுவின் சிறப்பான துடுப்பாட்டத்தினால் இலங்கை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதலாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

நேற்று 8-வது ரி 20 மகளிர் உலகக் கிண்ணம் கிரிக்கெட் போட்டியின் முதலாவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதின.

இதன்போது நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியின் தலைவி சமாரி அடப்பட்டு பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். சமாரி அடப்பட்டு 68 ரன்களும், விஷ்மி குணரத்னே 38 ரன்களும் அணிக்காகப் பெற்றுக் கொடுத்தனர்.

130 ரன்கள் என்ற வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தினை ஆரம்பித்த தென் ஆப்பிரிக்கா ஆரம்பம் முதல் விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்தது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியால் 9 ரன்களை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுக்கு 126 ரன்களை பெற்றுக் கொண்டது. இதன்மூலமாக இலங்கை அணி 3 ரன் வித்தியாசத்தில் தனது முதலாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இப்போட்டியின் ஆட்ட நாயகி விருது அணித்தலைவி சமாரி அடப்பட்டு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews