பாரிய நெருக்கடிகளை சந்திக்கும் ஆபத்தில் இலங்கை விமான சேவை

விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக பதவி விலகுவதால் இலங்கை எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு 138 விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தேவைப்பட்ட போதிலும் தற்போது 81 அதிகாரிகள் மாத்திரமே சேவையில் இருப்பதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் 4 அல்லது 5 உத்தியோகத்தர்கள் சேவையில் இருந்து விலகிச் சென்றால், இந்த நாட்டில் விமானப் பயணம் பாரிய ஆபத்துக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளதாக சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்காலத்தில் எமக்கு சொந்தமான வான்வெளியை சர்வதேச சிவில் விமான சேவைகள் சங்கம் வேறு ஒரு அண்டை நாட்டிற்கு கையளிக்கும் அபாயம் உள்ளதாகவும்  சுட்டிக்காட்டியுள்ளது.

அவ்வாறான நிலையேற்பட்டால், இலங்கை பாரிய அந்நிய செலாவணி வருமானத்தை இழக்கும் அபாயம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews