மொட்டு தோற்ற வரலாறு இல்லை! இம்முறையும் வெற்றிவாகை சூடும்! – ரோஹித நம்பிக்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோற்ற வரலாறு இல்லை. 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றியை இம்முறை தேர்தலிலும் பெற்றுக்கொள்வோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற முறையில் 250 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக ‘மொட்டு’ச் சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் பட்டியல்களைத் தாக்கல் செய்துள்ளோம்.

நாங்கள் தாக்கல் செய்த எந்த வேட்புமனுக்களும் நிராகரிக்கப்படவில்லை. கட்சி என்ற முறையில் எமது பொறுப்புகளை சிறந்த முறையில் நிறைவேற்றியுள்ளோம்.

அதேபோன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமது கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொண்டுள்ள கட்சிகள் கூட்டணி என்ற முறையில் வேறு சின்னத்தில் போட்டியிடுகின்றன.

இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற முறையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். இது உண்மையில் தொகுதிகளுக்கான தேர்தலாகக் காணப்படுகின்றது.

2018 ஆம் ஆண்டு நாம் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வரலாற்று ரீதியிலான வெற்றியைப் பெற்றோம். அந்த வெற்றியைப் போன்றே இம்முறை தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கின்றோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோற்ற வரலாறு இல்லை. அரசு என்ற முறையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை எம் மீது முன்வைக்கின்றனர். தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசு முயற்சிப்பதாகக் கூறுகின்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற முறையில் தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.

எமது கட்சியே முதலாவதாக வேட்பாளர் பட்டியலைத் தாக்கல் செய்தது. கட்டுப்பணத்தையும் முதலாவதாக எமது கட்சியே கட்டியது. எனவே, தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் பின்வாங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews