உள்ளுராட்சி மன்ற தேர்தல் கொடுக்கும் படிப்பினையை வைத்து தொடர்ந்தும் பயணிக்கலாம் – எஸ் சிறிதரன்….!

உள்ளுராட்சி மன்ற தேர்தல் கொடுக்கும் படிப்பினையை வைத்து தொடர்ந்தும் பயணிக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலிற்கான கட்டுப்பணத்தை நாம் இன்று செலுத்தியுள்ளோம். கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணம் இன்று கிளிநொச்சி தெரிவத்தாட்சி அலுவலகத்தில் செலுத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இந்த தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொர்பில் நாம் பேசி வருகின்றோம். அதன் அடிப்படையில் எமது பணிகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.
கிளிநொச்சி மண்ணில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தமிழரசு கட்சி அதே மாவட்டத்தில் தனியாக கட்டுப்பணம் செலுத்தியது தொடர்பில் ஊடகவியலாளர் வினவினார். அதற்கு பதிலளித்த சிறிதரன்,
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதாக எனக்கு தெரியவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும், நாடாளுமன்ற குழுவிற்கும் இரா சம்பந்தனே தலைமை வகித்துக்கொண்டிருக்கிறார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புதான் நாடாளுமன்றத்திலும், சர்வதேச சமூகத்திலும் அடையாளமாகக் கொண்டிருக்கிறது.  ஆகவே இது ஒரு உள்ளுர் அதிகார சபை தேர்தல்கள். இந்த தேர்தலின் வடிவம், தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகள் மற்றும் செயற்பாடுகளின் அடிப்படையில் மக்கள் தெரிவு செய்யவுள்ளனர்.
அதற்கான கள பரீட்சையாக பார்க்கலாம். இதில் சாதக பாதக நிலை ஏற்படலாம். இன்று வெளியான செய்திகளினடிப்படையில், எமது தலைவர் ஓர் இரு நாட்களில் இது தொடர்பில் அறிக்கை ஒன்றின் ஊடாக தெளிவுபடுத்த உள்ளதாக அறிய முடிகிறது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் ஏன் தனித்தனியாக போட்டியிட வேண்டிய தேவை ஏற்பட்டது என்பது தொடர்பில் அவர் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.
ஆகவே பொறுப்பு வாய்ந்த கட்சியின் உறுப்பினர் என்ற வகையில், அவருடைய அறிக்கை வரும்வரை பொறுமையோடும், நிதானத்தோடும் இந்த விடயங்களை கையாள்வதே பொருத்தம் என தான் கருதுவதாக தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews