10 நாட்கள் முடக்கத்தால் ரூ 15,000 கோடி இழப்பு |

30 ஆம் திகதிக்கு பின் முடக்கும் எண்ணம் இல்லை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால

நாட்டை முடக்கி வைத்துள்ள இந்த 10 தினங்களில் ஏற்படும் சுமார் 15,000 கோடி ரூபா வரையிலான பொருளாதார இழப்பை எமது நாட்டால் தாங்க முடியாது. எனவே எதிர்வரும் 30 ஆம் திகதி நாட்டை திறப்பது மிகவும் அவசியமானதென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா தொற்று நோய் மிக வேகமாக பரவிக் கொண்டிருந்த நேரத்திலும், பொருளாதார வல்லுநர்கள் நாட்டை மூடுவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடுமையான இழப்பை ஏற்படுத்தும் என்று தொடர்ந்து கூறிவந்தனர்.

எனவே, இந்த இரண்டு வாரங்களில் தற்போது மேற்கொள்ளப்படும் வெற்றிகரமான தடுப்பூசி வழங்கும் செயல்முறைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட சுகாதார ஆலோசனையின் பேரில் மக்கள்

செயல்படுவது மிகவும் அவசியமென்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

எதிர்வரும் 30 ஆம் திகதி நாட்டை மீண்டும் திறப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் மேலும் ஒத்திவைப்பதற்கு எதிர்பார்க்கப்படவில்லையென்றும், இவ்வாறு நாட்டை முடக்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டால், அது நாட்டின் பொருளாதாரத்திற்கு தாங்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

எனவே, நாடு விரைவில் திறக்கப்பட வேண்டும் என்பது தனது நிலைப்பாடு என்று தெரிவித்த அவர், தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே, பொருளாதார வல்லுநர்கள் நாடு முழுமையாக மூடப்படக் கூடாது என்ற எண்ணத்தில் இருந்தனரென்றும் தெரிவித்தார்.

எனவே, தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு 30 ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பதற்கு எதிர்பார்க்கவில்லையென்றும் அவர் கூறினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews