கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தற்போது போதைப்பொருள் பாவனை பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இது தொடர்பில்கல்வி அமைச்சு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

பாடசாலைகளில் போதைப்பொருளை ஒழிக்கும் வேலைத்திட்டத்தை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள், பாடசாலை பேருந்துகள் மற்றும் வேன்கள் என்பன போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,“எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் உள்ள 100 கல்வி வலயங்களில் 10,150 பாடசாலைகளை உள்ளடக்கி இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்து இந்த விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும்.

இதேவேளை கொழும்பில் உள்ள 144 பாடசாலைகளில் போசாக்கு திட்டத்திற்கு மேலதிகமாக போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த விசேட நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான அனைத்து அறிவுறுத்தல்களும் அனைத்து மாகாண பணிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் கல்வி அமைச்சின் செயலகத்தினால் மேலதிக அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

பாடசாலை நேரம் முடிந்த பின்னர் தனி வகுப்பு அல்லது வெளியூர் செல்லும் மாணவர்கள் குறித்து பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.”என்று தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews