மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட 9 ஏ பெறுபேற்றை பெற்ற பாடசாலை மாணவன்! வெளியான காரணம்

அம்பிட்டிய பிரதேசத்தில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது “ஏ” பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர் ஒருவரை நபரொருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.

பாதிக்கப்பட்ட மாணவர் பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில் கவலைக்கிடமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,மாணவனின் உடலுக்கு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் 28 வயதுடைய சந்தேகநபர் அம்பிட்டிய தம்பவெல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் 9A உயர் பெறுபேறுகளைப் பெற்ற குறித்த மாணவர் கண்டி அம்பிட்டிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.

கடந்த சனிக்கிழமை இரவு, பரீட்சை பெறுபேறுகளை தெரிவிப்பதற்காக உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது மற்றுமொரு நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபர், மாணவனின் தந்தையிடம் கப்பம் கேட்டு, கொடுக்காததால், இவ்வாறு மாணவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது மாணவன் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தையிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது தீ வைத்த நபரை அடையாளம் காண முடியவில்லை என மாணவனின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அம்பிட்டிய பிரதேசத்தை அச்சுறுத்தும் கும்பலொன்று இந்த கொடூர செயலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள பிரதேசவாசிகள், குறித்த கும்பலுக்கு பயந்து மாணவனின் குடும்பத்தினர் தகவல்களை வெளியிடுவதில்லை எனவும் தெரிவித்திருந்தனர்.

இந்த கும்பல் ஹெரோயின், ஐஸ்,கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் அளித்தும் எவ்வித பயனும் இல்லை எனவும், தகவல் கொடுப்பவர்கள் தொடர்பில் உடனடியாக பொலிஸார் கும்பலுக்கு தெரிவிப்பதாகவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இதற்கு முன்னர் அம்பிட்டிய பிரதேசத்தில் ஒருவர் சிலுவையில் அறையப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும் தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றிருந்த நிலையில், அம்பிட்டிய தம்பவெல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews