எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு – அமைச்சர் கஞ்சன வெளியிட்ட தகவல்

இலங்கையில் பாடசாலை பேருந்துகள் மற்றும் அலுவலக பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் மூன்றாம் நாளான நேற்று உரையாற்றும்போது எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் உரையாற்றிய அவர், “முச்சக்கர வண்டிகள் மற்றும் பேருந்துகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதைப் போன்று எதிர்காலத்தில் பாடசாலை பேருந்துகள் மற்றும் அலுவலக பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் மீண்டும் மின்சார கட்டணத்தை திருத்தியமைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

நாட்டை யார் ஆட்சி செய்தாலும் இந்த நாட்டில் மீண்டும் மின் கட்டணத்தை திருத்தியமைக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இந்தப் பயணம் தொடர முடியாது.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 17 சுற்றுலா வலயங்களை இலக்காகக் கொண்டு, அந்த சுற்றுலா வலயங்களில் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

இந்த நெருக்கடிகளில் 80 வீதம் அடுத்த வருடத்தின் நடுப்பகுதிக்குள் குறையும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மின்கட்டணத்தை திருத்தியமைப்பது சிறந்தது. இறுதியாக கடந்த 2013ஆம் ஆண்டு தான் மின்கட்டணம் அதிகரித்துள்ளது” – என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews