ரிஷாட் பதியுதீன் அச்சுறுத்தல் விடுத்ததாக சிறைச்சாலை வைத்தியரினால் முறைப்பாடு |

– சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் தலைமையில் விசாரணை

கொழும்பு, வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, குறித்த சிறைச்சாலையின் வைத்தியரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தனக்கு ரிஷாட் பதியுதீன் அச்சுறுத்தல் விடுத்ததா, மெகசின் சிறைச்சாலையின் மருந்து வழங்கும் சிகிச்சை நிலையத்தில் (Dispensary) பணியாற்றும் வைத்தியர் பிரியங்க இந்துனில் புபுலேவத்த என்பவரால் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய குறித்த முறைப்பாடு தொடர்பில் சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த சிகிச்சை நிலையத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி வந்த ரிஷாட் பதியுதீனிடம், கொவிட்-19 பரவல் நிலை காரணமாக, நோயாளிகளை பார்வையிடும் முறைமைக்கு விதிவிலக்காக அவர் வந்துள்ளதாக, குறித்த வைத்தியர் அவரிடம் தெரிவித்துள்ள நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ரிஷாட் பதியுதீன் குறித்த வைத்தியருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக குறித்த வைத்தியரினால், சிறைச்சாலை பிரதான வைத்தியரிடம் அதற்கு அடுத்த நாள் (16) எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளதோடு, அதன் பிரதியை வெலிக்கடை சிறைச்சாலை பொலிஸாரிடம் வழங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸாருக்கே முறைப்பாடு செய்ய வேண்டுமென நேற்றையதினம் (22) சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நேற்றையதினம் (22) பொரளை பொலிஸாருக்கு குறித்த வைத்தியர் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைய, மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபரின் உத்தரவுக்கமைய, கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவினரினால் (CCD) நேற்றையதினம் (22) விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பில் இன்றையதினம் (23) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews