ஊரடங்கில் நாடு முழுவதும் 900 பொலிஸ் சோதனைச் சாவடிகள் – பொலிஸ் பேச்சாளர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதை தொடந்து நாடு முழுவதும் சுமார் 900 பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில் ,

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய பொருள் விநியோகத்துடன் தொடர்புடையவர்கள், தொழிலுக்கு செல்வோர் மற்றும் மருத்துவ தேவை அல்லது மரண வீடுகள் உள்ளிட்டவற்றுக்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறானவர்களுக்கு மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் ஊடாக ஊரடங்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்..

நாடு முழுவதும் சுமார் 900 பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஏதேனுமொரு வழியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக முப்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

தற்போது அமுலில் உள்ளது பொலிஸ் ஊரடங்கு சட்டம் அல்ல. இவ்வாறான கண்காணிப்புக்களில் பொலிஸார் ஈடுபடுவது மக்களினதும் சமூகத்தினதும் நலனுக்காகவே என்பதை சகலரும் உணர வேண்டும், என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews