பேராதனை பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு

சுமார் இரண்டு மாதங்களாக மூடப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடம் நாளை (14ஆம் திகதி) முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என பேராதனைப் பல்கலைக்கழக பிரதி உபவேந்தரும் ஊடகப் பேச்சாளருமான பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நேற்று (12ஆம் திகதி) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்தடெரன்ஸ் மதுஜித் மேலும் கூறியதாவது:

“மீண்டும் கற்கைநெறியை தொடங்குவதற்காக  மாணவர்களிடம் எழுத்துபூர்வ உறுதிமொழியை அளிக்குமாறு பீடாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார். 60% மாணவர்கள் அதற்கு நல்ல பதில்களை அளித்துள்ளனர். எனவே, பீடாதிபதியின் ஒப்புதலுடன், மீண்டும் கற்கைநெறியை தொடக்க உள்ளோம். தற்போதும் மாணவர்கள் விடுதிகளுக்கு வருகின்றனர்.

கடந்த காலங்களில் நடந்த சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்துக் கொள்வதாக பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் எமக்கு வாய்மொழி மூல உறுதிமொழியை வழங்கியுள்ளனர். மேலும், உணவகம் உள்ளிட்ட பொது இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் நடந்த அசம்பாவிதங்கள் இனி நடக்காது என நம்புகிறோம்.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தேவையான தொழில்நுட்ப உதவிகளை பெற்று வருகிறோம். பீடத்தில் இதற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இன்னும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த விசாரணைகளின் போது குறிப்பிட்ட சில மாணவர்களோ அல்லது பல மாணவர்களோ சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக தெரியவந்தால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

பல்கலைக்கழகத்தில், புதிய மாணவர் மீதான பகிடிவதை மிகவும் குறைவாக உள்ளது. துன்புறுத்தல் சட்டத்தின்படி, கொடுமைப்படுத்துதல் பல்கலைக்கழகத்தில் இருக்க முடியாது. இந்த கொடுமையால் புதிய மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவர்களை மீண்டும் தொந்தரவு செய்யத் தேவையில்லை. கஷ்டப்பட்டுத்தான் பல்கலைக்கழகத்துக்கு வருகிறார்கள். இந்த காலாவதியான விஷயங்கள் பல்கலைக்கழக அமைப்பில் இருந்து களையப்பட வேண்டும்.

ஏறக்குறைய 13,000 மாணவர்களைக் கொண்ட குழு ஒன்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் போது மிகவும் அப்பாவி மாணவர்களாக உள்ளனர். துரதிஷ்டவசமாக, சில அரசியல் அழுத்தங்கள் காரணமாக இந்த மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்த குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்காமல் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு அந்த அரசியல் குழுக்களுக்கும் உண்டு.

மாணவர்கள் தமது பல்கலைக்கழகக் கல்வியை வெற்றிகரமாக முடிப்பதற்குத் தேவையான பின்னணியைத் தயார்படுத்துமாறு அனைத்துத் தரப்பினரும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். பல்கலைக்கழக மாணவர்கள் பொது மக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்கிறார்கள். எனவே, பல்கலைக்கழகத்தில் அரசியல் செல்வாக்கு செலுத்தும் அனைவரும் அந்த மாணவர்கள் சுதந்திரமாக கல்வியைத் தொடர தேவையான சூழலை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews