வடக்கில் காணி விடுவிப்பு – ரணில், டக்ளஸிற்கு அளித்த உறுதிமொழி

வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பருவ மழைக்காலம் நிறைவடைந்ததும் சாதகமான, தீர்க்கமான முடிவெடுக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு தீர்வுகாணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் அதிபர் இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வலி வடக்கு, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு நேற்று (02) சென்ற அமைச்சர் அங்கு கடற்றொழிலாளர்களுடனான சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பருவ மழைக்காலம் நிறைவடைந்ததும் நேரடியாக சம்மந்தப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து தீர்க்கமான சாதகமான முடிவுகளை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளார்.

எனவே, கடந்த காலங்களில் தமிழ்த்தரப்புகள் விட்ட தவறுகள் என்னவென்றால் கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதே. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டிருக்காது.

தற்போது கிடைக்கும் சாதகமான வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு இனியாவது இருப்பதை பாதுகாத்துக்கொண்டு அதனை முன்னோக்கிச் செல்ல வேண்டும். பிரச்சினைகள் தீர்வை நோக்கி போகவேண்டுமேயொழிய அதனை குழப்பிக்கொண்டு போகும் நோக்கம் எனக்கில்லை என அமைச்சர் தெரிவித்தார்.

வலி வடக்கு, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்டதுடன் பிரதேசக் கடற்றொழிலாளர்களினால் முன்வைக்கப்பட்ட அபிப்பிராயங்கள் தொடர்பில் ஆராய்ந்தது தேவையான ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews