முற்றுகையிடப்பட்டது பிரதேச செயலகம் – தொடர் பதற்ற நிலை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில் ஒன்று கூடி ஆரம்பமான மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம் தெல்லிப்பளை சந்தியை அடைந்து, தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்னால் போராட்டக்காரர்களால் முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பேராட்டத்திற்கான முன் ஏற்பாடாக இன்று காலை 8 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக முன்றலில், யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றுகூடி, வாகனப் பேரணியாக தெல்லிப்பளை பிரதேச செயலகம் நோக்கி புறப்பட்டனர்.

இந்த போராட்டத்தில் சிவில் அமைக்களும் இணைந்து கொண்டு, சிறிலங்கா அரசாங்கமும், சிறிலங்கா படையினர் வலி வடக்கு தாயகப் பகுதியில் கையகப்படுத்தி வைத்திருக்கும் காணிகளை விடுவிக்கக் கோரி மாபெரும் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தின் போது தெல்லிப்பளை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் இடம்பெற்றதோடு, பிரதேச செயலகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் போது காணி அமைச்சினுடைய மேலதிக செயலாளர், 1674 ஏக்கர் நிலத்தை சுவீகரிப்பதற்கு உத்தரவு இட்டு தெல்லிப்பளை பிரதேச செயலாளருக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படும் கடிதம் எரிக்கப்பட்டுள்ளது எனவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முற்றுகைப் போராட்டத்தை தொடர்ந்து தெல்லிப்பளை பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றும் போராட்டக்காரர்களால் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் தலைவர்களும் இணைந்துகொண்டிருந்தனா என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews