இன்று கொழும்பில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க தயார்ப்படுத்தல்! எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கைகள்

கொழும்பில் இன்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அல்லது அதற்கருகில் போராட்டத்தை நடத்துவதற்கு அனுமதி வழங்குவதில்லை என குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள தரப்பினருக்குக்கு கடிதமொன்றின் மூலம் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொழும்பு மத்திய பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் K.A.E.N.தில்ருக்கின் கையொப்பத்துடனான இந்த கடிதத்தை கையளிப்பதற்காக இன்று (02.11.2022) அதிகாலை முதல் பொலிஸ் அதிகாரிகள், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள தரப்பினரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு சென்றுள்ளனர்.

குறித்த கடிதத்தில், இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறும் போது வீதிகளை மறிப்பதன் காரணமாக அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர், கடமைகளின் பின்னர் வீடு திரும்பும் மக்கள், கோட்டை மற்றும் புறக்கோட்டையில் மொத்த வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு இடையூறுகள் ஏற்படலாம்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது வாகன நெரிசல் ஏற்பட முடியும் என்பதன் காரணமாக கட்டுநாயக்க, பியகம, கண்டி மற்றும் வத்துபிட்டிவல பொருளாதார மத்திய நிலையங்களிலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொள்கலன்களில் பொருட்களை கொண்டு வருவதிலும் பாதிப்புகள் ஏற்படலாம்.

ஆர்ப்பாட்டத்தின் ​போது வீதிகள் மறிக்கப்படுவதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம். பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 80ஆவது பிரிவின் கீழ் ஒலிபெருக்கி போன்றவற்றை பயன்படுத்துவதாக இருந்தால் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் அனுமதியை பெற வேண்டும். என்றபோதிலும், இதுவரை அவ்வாறான அனுமதி பெறப்படவில்லை.

வீதிகளை மறித்தால் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்ப்பதற்கு பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் படியும் வேறு சட்டங்களின் படியும் நடவடிக்கை எடுக்கவேண்டி ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அவசர நிலைமைகளின் போது பொலிஸாரின் செயற்பாட்டுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்க, சட்ட மா அதிபரின் நேரடி கட்டுப்பாட்டில் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் சிறப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் கோரிக்கைக்கு அமைய, சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரட்ணத்தின் நேரடி மேற்பார்வையில் செயற்படும் வண்ணம், சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி பிரியந்த நாவான, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் டிலான் ரத்நாயக்க பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மாலி கருணாநாயக்க ஆகியோரை உள்ளடக்கியதாக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு, சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பிரியந்த நாவானா கையெழுத்திட்டு தொலைபேசி இலக்கங்களையும் உள்ளடக்கி விஷேட கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

அதன்படி, பொலிஸார் எந்தவொரு அவசர நிலைமையின் போதும், குறித்த மூன்று சட்ட அதிகாரிகளையும் அவரகளது கையடக்கத் தொலைபேசிக்கு அழைத்து உடனடியாகவே ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews