யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தொடர்பில் வெளியான தகவல்

யாழ். பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி இம்மாதம் நடைபெறவுள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார்.

பட்டமளிப்பு விழா தொடர்பில் ஊடகங்களுக்கு விபரிக்கும் வகையிலான காணொளி யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஊடகப் பிரிவினால் நேற்று வெளியிடப்பட்டது.

அக் காணொளி யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மேலும் தெரிவித்ததாவது,

“யாழ். பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி இம்மாதம்  6ஆம், 7ஆம், 8ஆம் திகதிகளில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் 185 பட்டப்படிப்பில் தகைமை பெற்றவர்களுக்கும், 2046 உள்வாரி மாணவர்களுக்கும், 147 தொலைக்கல்வி மாணவர்களுக்குமாக 2378 பேருக்குப் பட்டங்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

இந்தப் பட்டமளிப்பு விழாவின் முதல் இரண்டு நாட்களும் முறையே மூன்று அமர்வுகளும், மூன்றாம் நாள் முறையே இரண்டு அமர்வுகளுமாக எட்டு அமர்வுகளில் பட்டங்களும், தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

பட்டமளிப்பு விழாவை யாழ். பல்கலைக்கழகத்தின் வேந்தர், வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்கள் தகைமைச் சான்றிதழ்கள், தங்கப் பதக்கங்கள் மற்றும் புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கௌரவிப்பார்” எனவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin