எரிபொருள் இருப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

கச்சா எண்ணெயின் தரம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சட்ட ரீதியாக பதிலளிக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் தரமற்றதாக இருப்பதால், அதிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் அதற்கான பதில் வழங்கியுள்ளார்.

இதற்கிடையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் போதுமான அளவு டீசல் மற்றும் எரிபொருள் இருப்பு உள்ளதாகவும் அமைச்சர் கூறுகிறார்.

லக்சபான உற்பத்தி வீழ்ச்சி, எரிபொருள் மற்றும் நீர் முகாமைத்துவத்திற்கு மின்சார சபையிடம் போதிய நிதி இல்லாத காரணத்தினால் மின்வெட்டை நீடிக்குமாறு கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு தேவையான எரிபொருள் இறக்குமதிக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் நடைபெற்றது.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அடுத்த சில மாதங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்யும் திட்டம், இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தேவைகள், இலங்கை மின்சார சபையின் உற்பத்தி திட்டங்கள் ஆகிய மூன்று நிறுவனங்களின் நிதி தேவைகள் குறித்தும் அங்கு கலந்துரையாடப்பட்டது.

Recommended For You

About the Author: admin