உக்ரைனில் மீட்கப்பட்ட இலங்கையர்கள் – உத்தியோகபூர்வ அறிக்கை வெளியாகவில்லை

உக்ரேனின் கர்கிவ் பகுதியில் ரஷ்யப் படையினரால் சிறைபிடிக்கப்பட்டிருந்த இலங்கையர்களை மீட்பது தொடர்பில் உக்ரைன் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிக்கையை வழங்கவில்லை என வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலுள்ள உக்ரைன் தூதரகம், துருக்கியேவில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் துருக்கியேவில் உள்ள உக்ரைன் தூதரகம் ஆகியவற்றின் ஊடாக உக்ரைன் அரசாங்கத்திடம் இந்த குழு பற்றிய தகவல்களை கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களால் ஆங்கிலம் அல்லது உக்ரேனிய மொழி பேச முடியாததால், உக்ரைன் பல்கலைக்கழகத்தில் எப்படி படிக்க முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும், உக்ரைன் அரசின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த ஏழு இலங்கையர்களும் மருத்துவ மாணவர்கள் அல்ல என்றும், சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்கு செல்ல முயன்றவர்கள் என்றும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய குறிப்பிட்டார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஏழு இலங்கையர்களும் சட்டவிரோத மனித கடத்தல்காரராக உக்ரைனுக்குச் சென்றதாகவும், அங்குள்ள மருந்துக் கடை ஒன்றில் பணிபுரிந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள போது ரஷ்யப் படைகளால் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறுவது கடினம் எனவும் பாலசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர்கள் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவிக்கவில்லை எனவும் பாலசூரிய குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, உக்ரைன் படையினரால் அண்மையில் மீட்கப்பட்ட ஏழு இலங்கையர்களும் ரஷ்யப் படைகளின் காவலில் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், ரஷ்யாவுடனான உறவுகளை சீர்குலைக்கும் வகையில் இவ்வாறான அறிக்கைகள் மிகவும் அவதானத்துடன் கையாளப்பட வேண்டும் என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கலாநிதி சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin