பொறுப்புக்கூறலில் தாமதம் – சிறிலங்காவுக்கு தொடரும் இறுக்க நிலை

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறலை நிலைநாட்ட சிறிலங்கா அரசாங்கம் தாமதப்படுத்தியுள்ளதால் இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கம் கலப்பு நீதிமன்ற பொறிமுறை தொடர்பில் கரிசனை செலுத்தவில்லை என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இடம்பெற்ற உப நிகழ்வில் கலந்து உரையாற்றிய போதே சுரேந்திரன் குருசுவாமி இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போதும், அதற்கு பின்னரும் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான சர்வதேச சட்ட பாதுகாப்பில் தோல்வி என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற உப நிகழ்வில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி, தமிழர் உரிமைக்கான குழுமத்தின் பிரதிநிதி பெரிடன்ஸ் பெர்டினான்டஸ் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் இந்த உப நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த சுரேந்திரன் குருசுவாமி, சிறிலங்கா அரசாங்கம் தமிழர் பிரதேசங்களை சிங்கள மயமாக்குவதோடு இராணுவமயமாக்கி, மக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற போதிலும், தமிழர் தரப்பினருக்கு சாதகமாக ஏதும் நடைபெறவில்லை என தமிழர் உரிமைக்கான குழுமத்தின் பிரதிநிதி பெரிடன்ஸ் பெர்டினான்டஸ் கூறியுள்ளார்.

சர்வதேச சமூகத்துடன் சிறிலங்கா அரசாங்கம் தனது உறவுகளை கட்டியெழுப்ப கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல தசாப்தங்களாக தமக்கான நீதியைக் கோரி நிற்பதாக வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தராஜன் நினைவூட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: admin