மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்கிறது அரச மருந்தாளர்கள் சங்கம்!

அடுத்த இரண்டு வார காலத்தில் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் என அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நாட்டில் புற்று நோய், இருதய நோய், வலிப்பு நோய் மற்றும் நீரிழிவு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் பயன்படுத்தும் மருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது என அந்த சங்கத்தின் தலைவர் அஜித் பீ.திலக்கரட்ன கூறியுள்ளார்.

இந்திய கடனுதவியின் கீழ் சுகாதார அமைச்சு மருந்துகளை கொள்வனவு செய்வதில் மிகவும் தாமதம் ஏற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பில் சுகாதார அமைச்சிடம் முறையான வேலைத்திட்டம் இல்லை எனவும் திலக்கரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக அத்தியவசிய மருந்துகளை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால், நாட்டில் பல வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை என அரச வைத்தியசாலைகளின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

மருந்து தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகள், தனியார் மருந்தகங்களில் மருந்துகளை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமையேற்பட்டுள்ளது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

Recommended For You

About the Author: admin