வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அசமந்தம்! மண்ணெண்ணெய் இருந்தும் சேவை இல்லை.. |

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் எரிபொருள் இருந்தும் காரைநகர் – ஊர்காவற்றுறை பாதைச் சேவையை செயற்படுத்துவதில்அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கின்றனர் என மக்கள்  தெரிவிக்கின்றன.

இதனால், இன்று (12) திங்கட்கிழமையும் பாதைச் சேவை இடம்பெறமாட்டாது எனத் தெரியவருகின்றது.

காரைநகர் – ஊர்காவற்றுறை பாதைச் சேவைக்கான ஒரு மாதத்திற்கு தேவையான மண்ணெண்ணெய் தங்களிடம் இருக்கின்றது எனவும் அதை ஊர்காவற்றுறைக்கு கொண்டுவருவதற்கு வாகன வசதி இல்லை எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து பாதையூடாக பயணிக்கும் சில அரச உத்தியோகத்தர்கள் இணைந்து குறித்த மண்ணெண்ணெயை ஏற்றிவந்து பாதைப் பணியாளர்களிடம் கையளிப்பதற்கு முயன்றனர் எனவும்

இதன்போது தலையிட்ட மேற்படி அதிகார சபையின் உத்தியோகத்தர் ஒருவர் தாம் நேரடியாகக் கொண்டுவந்து தருவார்கள் எனக் கூறினார் எனவும் தெரியவருகின்றது.

ஆனால், நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை மண்ணெண்ணெய் தங்களுக்கு கொண்டுவந்து தரப்படவில்லை எனவும், அதைப் பெற்றுக்கொள்ள தாங்கள் முயன்றபோதும் மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை எனவும் பாதைப் பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அசமந்தப் போக்கினால் பாதிக்கப்பட்டுள்ள பாதைப் பயணிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு முயன்று வருகின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, குறித்த பாதைச் சேவையை சீராக்க நடவடிக்கை எடுக்குமாறு சில தினங்களுக்கு முன்னனர் வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews