அடிபணிந்தார் அதிபர் ரணில் – ஐ.எம்.எவ் ஆலோசனைகளை ஏற்க மறுப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளை பொருட்படுத்தாமல், சிறிலங்கா அரசாங்கம் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடிபணிந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தின், பாணந்துறை தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சஜித் பிரேமதாஸ, சிறிலங்காவின் அதிபர் ராஜபக்சர்களுக்கு கடன்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ”ராஜபக்சர்களின் அல்லது அரசாங்கத்தின் கடனை செலுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு தேவைப்பாடு இல்லை.

இந்நாட்டின் இருநூற்றி இருபது இலட்சம் மக்களின் கடனை அடைத்து அவர்களின் வாழ்வை சிறப்புறச் செய்யும் தேவைப்பாடு மாத்திரமே ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ளது.

இந்த நாட்டை வங்குரோத்தாக்கிய காக்கை கூட சுதந்திரமாக அமெரிக்கா செல்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து விரட்டியடித்த அதிபர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளார்.

அவர்கள் அந்த சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட லஹிரு மற்றும் தமிதா போன்றோரை அரசாங்கம் சிறைக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது.

அன்று இந்நாட்டில் அடக்குமுறையை ஆரம்பித்தவர்கள் மஹிந்த ராஜபக்சவுக்காக அலரி மாளிகையில் திரண்ட குண்டர்கள் தான். அவர்கள் அனைவரும் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

சர்வதேச நாணய நிதியம் கூட இலங்கையில் ஒரு புதிய மக்கள் அபிப்பிராயம் உருவாக வேண்டும் என அறிவித்துள்ள நிலையில், அரசாங்கம் மொட்டுவின் 134 பேரின் அபிப்பிராயத்திற்கு அடிபணிந்துள்ளது.

ஒட்டுமொத்த நாட்டு மக்களும் ஒன்றிணைந்து பொதுப் போராட்டத்தின் மூலம் முன்னாள் அதிபரையும் பிரதமரையும் விரட்டியடித்தனர். ஆனால் அதற்கு பதிலாக மொட்டுவை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிபர் ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவே, தற்போதைய அதிபர் மொட்டுக்கு தனது நன்றிக் கடனை நிறைவேற்றி வருகிறார். மக்களுக்கு ஆற்ற வேண்டிய தமது கடமைகளை மறந்துள்ளார்” என்றார்.

Recommended For You

About the Author: admin