தினமும் 12 மார்பக புற்றுநோயாளர்கள் அடையாளம்..! கலாநிதி நடராஜா ஜெயக்குமார்.

இலங்கையில் ஒரு நாளில் 12 மார்பகப் புற்றுநோயாளர்கள் இனம் காணப்படுவதாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின் வைத்திய நிபுணரும் சார்க் நாடுகளின் புற்றுநோயாளர் சங்கத் தலைவருமான கலாநிதி நடராஜா ஜெயக்குமார் தெரிவித்தார்.

இலங்கையில் புற்று நோய் அதிகரித்துவருவது தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார், இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் பெண்கள் அதிகளவில் புற்றுநோயாளர்களாக இணங்கானப்படுகின்ற நிலையில் வயோதிபமும் மற்றும் மரபணுவும் காரணமாக அமைகிறது.

இலங்கையில் ஆண்களையும் தாக்கும் குறித்த புற்றுநோயானது புகைத்தல் மதுபானம் அருந்துதல் கிருமி நாசினி பயன்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணுதல், உடற்பயிற்சியின்மை உறைப்பான உணவுகளை உண்ணுதல் போன்றவற்றினால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

ஆண்களுக்கு புற்றுநோயானது வாய் மற்றும் தொண்டைப் பகுதிகளில் ஏற்படுவதுடன் பெண்களுக்கு பெரும்பாலும் மார்பகம் மற்றும் கர்ப்பப்பையில் ஏற்படுகின்றது. அதுமட்டுமல்லாது பெண்களுக்கு மாதவிடாய் நின்ற நிலையில் ஏற்படும் தொடர்ச்சியான இரத்தப்போக்கு புற்றுநோய் அறிகுறிகளாக கொள்ளப்படுகிறது.

மனித உடலில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பதை அறிவது மிகவும் கடினமாக இருக்கின்ற நிலையில் நீண்ட நாள் இருமல் வாய்ப் புண், மலம் கழித்தலில் சீத மேற்படுதல், உடலின் வெளிப் பகுதிகளில் ஏற்படும் கட்டிகள் போன்றன புற்றுநோய்களுக்கான அறிகுறிகளாகும்.

இவ்வாறான அறிகுறிகள் ஏற்படும்போது வைத்தியரை அணுகினால் நவீன சிகிச்சை முறைகள் மூலம் நோயை அறிவதற்கான வசதிகள் வைத்தியசாலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புற்று நோயை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் அதனை குணமாக்குவதற்கு

வழிமுறைகள் உள்ளதுடன் நோய்க்கிருமிகள் உடலின் ஏனைய பகுதிகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்துவதற்கான கதிர்வீச்சு சிகிச்சைகளும் உள்ளது. குறித்த நோயானது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவக்கூடிய நோயாகக் காணப்படாத இடத்து நோயாளர்களுடன் இயல்பாகப் பழகிக் கொள்ள முடியும்.

புற்று நோயை கட்டுப்படுத்தும் இயற்கை உணவுகளை அதிகம் உண்பதுடன் மஞ்சள் பழங்கள் அவரை இனத் தாவரங்கள் கற்றாழை போன்றவை புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக புற்றுநோய் சிகிச்சைக்காக வழங்கப்படும்

மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த மருந்துகள் மட்டும் பெற்றுக் கொள்ளப்படுகின்றது.ஆகவே இலங்கையில் புற்றுநோயின் தாக்கம் தற்போது சற்று அதிகமாக உணரப்படுகின்ற நிலையில் நோய் தொடர்பில் விழிப்பாகவும் நோய் ஏற்பட்ட பின்னர் உரிய நேரத்தில்

வைத்தியரை அணுகுவதன் மூலம்புற்று நோயை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews