நூற்றுக்கணக்கான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயம்! மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் வரிசைகள்

தற்போது மீண்டும் எரிபொருள் வரிசைகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ச தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், காசோலை முறைமையை இடைநிறுத்தியதன் காரணமாக, ஒரே தடவையில் பணத்தை செலுத்தி எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியாததாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கான எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது.

முன்னரை விடவும், அதிகமான எரிபொருளை நேற்று முதல் விநியோகிப்பதாக கனியவளக் கூட்டுத்தாபனம் கூறியுள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனம், முன்னதாக காசோலை முறைமைக்கு எரிபொருளை விநியோகித்தது.

ஆனால், தற்போது, எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முற்பகல் 9.30க்கு முன்னர் பணத்தை செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று, எரிபொருளைப் பெற்றுக்கொள்ள நூறு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்தை செலுத்த வேண்டும்.

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அவ்வாறு பணத்தைச் செலுத்த முடியாது. எனவே, நாளாந்தம் 200, 300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில், பழைய முறைமைக்கு அமைய, காசோலை வசதியின் கீழ் எரிபொருளை வழங்குமாறு, அமைச்சரிடமும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமும் கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin