ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளான தகவலை அடக்கி வாசித்த வங்கி நிர்வாகம்! 8 ஊழியர்களுக்கு தொற்று.. |

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றின் கிளையில் 8 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் வங்கி நிர்வாகம் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பிலான அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த வங்கியின் ஊழியர்கள் சிலருக்கு கடந்த வாரம் கொரோனா நோய் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அவர்களில் சிலர் வீடுகளிலேயே தங்கியிருந்ததுடன் வெளி மாவட்டத்தினைச் சேர்ந்த முகாமையாளர் உட்பட

ஊழியர்கள் சிலர் மட்டும் தாமாக சென்று தம்மை பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கின்றனர். இருந்தபோதிலும் சம்பவம் தொடர்பில் வங்கி நிர்வாகத்தினர் அடுத்த கட்ட நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்று தெரியவருகிறது.

வங்கியில் சக ஊழியர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தால் ஏனைய ஊழியர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தி வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களை எச்சரிக்கவேண்டியது ஏனைய வங்கிகளில் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நடைமுறையாகும்.

இருந்தபோதிலும் குறித்த வங்கி நிர்வாகம் தமது ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை தொடர்பில் சுகாதாரத் தரப்பினருக்கு தகவல் வழங்காததுடன் வாடிக்கையாளர்களுக்கும் எச்சரிக்கைவிடுக்கத் தவறியுள்ளமை தொடர்பில் நம்பகரமாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நேற்றும் நேற்று முன்தினமும் ஓய்வூதியம் பெறுவதற்காக பெருமளவான கிளிநொச்சியைச் சேர்ந்த முதியவர்கள் குறித்த வங்கிக்கு வந்து நீண்ட நேரம் இருந்து தமது ஓய்வூதியங்களைப் பெற்றுச் சென்றிருக்கின்றனர்.

இந்நிலையில் வங்கி ஊழியர்கள் 08 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வங்கிக்கு வந்து பேராபத்தை சந்தித்துச் சென்றிருக்கக்கூடிய முதியவர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கு வங்கி நிர்வாகம் பொறுப்பேற்குமா?

என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews