பாகிஸ்தானில் பேரழிவு..! பலி எண்ணிக்கை 1,033 ஆக உயர்வு

பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழை காரணமாக இதுவரை 1,033 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்கத்தை விட மிக அதிகமாக பெய்து வரும் பருவ மழை காரணமாக இந்த இறப்புகள் பதிவாகியுள்ளது. இது நாட்டின் “தீவிர காலநிலை பேரழிவு” என்று தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பருவ மழை, நாடு முழுவதும் வழக்கத்தைவிட மிக அதிகமாக பெய்தது. இதன் காரணமாக, பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாமல் மீட்புக் குழுவினா் திணறும் அளவுக்கு மழையும் வெள்ளப் பெருக்கும் மிகத் தீவிரமாக இருந்தது.

தொடர்ந்து பெய்து வரும் பருவ மழைக்கு நாடு முழுவதும் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனா். ஏராளமானவா்கள் காயமடைந்துள்ளனா். ஆயிரக்கணக்கானவா்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பேரிடா் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தை விட முன்னதாக தொடங்கியதில் இருந்து இறப்பு எண்ணிக்கையை அறிவித்தது.

இந்நிலையில், அந்நாட்டு தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக, கைபர் மற்றும் தெற்கு சிந்து மாகாணங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 119 போ் இறந்துள்ளனர். இதுவரையில், 1,033 போ் உயிரிழந்துள்ளனா். 1,527 போ் காயமடைந்துள்ளனா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரலாறு காணாத மழைக்காலம் நாட்டின் நான்கு மாகாணங்களை பாதித்துள்ளது.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 3,451 கி.மீ வீதிகள், 147 பாலங்கள், 170 கடைகள், 9 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.

ஏறக்குறைய 3,00,000 குடியிருப்புகளை காணவில்லை, ஏராளமான வீதிகள் தடைப்பட்டுள்ளதுடன், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin