தன் மீதான மோசடிக் குற்றச்சாட்டை கைவிடுமாறு த.சத்தியமூர்த்தி கோரிக்கை!

தன் மீதான ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகளை கைவிடுமாறு கோரி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஆதரவை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி நாடியுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு எதிராக, வைத்தியசாலைச் சமூகத்தினரால் பல்வேறு ஊழல், மோசடி, நிர்வாக முறைகேடு, அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாகச் சுமத்துப்பட்டு வந்த நிலையில், இவ்விடயத்தை அண்மையில் கையிலெடுத்தது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் போதனா வைத்தியசாலைக் கிளை, இது தொடர்பில் உரிய விசாரணைகளை ஆரம்பிக்கக் கோரி, சுகாதார அமைச்சிற்கு தொடர்ச்சியான கடிதங்களையும் அனுப்பி வைத்திருந்தது. தற்போது சுகாதார அமைச்சுச் செயலாளரின் உத்தரவின் பேரில் வைத்தியர் சத்தியமூர்த்திக்கெதிரான உத்தியோகபூர்வ விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே தன் மீதான குற்றச்சாட்டுக்களை விலக்கக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமைக் குழுவை வைத்தியர் த.சத்தியமூர்த்தி சந்தித்துள்ளார்.
சந்திப்பு அரச வைத்திய அதிகாரிகள் சங்க தலைமைக் காரியாலயத்தில் கடந்த திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. வைத்தியர் சங்கத்தின் யாழ் கிளையினரும் இதன்போது உடனிருந்தனர். எனினும் இக்கூட்டத்தின் பின் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள், தாம் வைத்தியர் சத்தியமூர்த்திக்கெதிரான குற்றச்சாட்டுக்களை ஒரு போதும் கைவிடப்போவதில்லை என்றும், சாதாரண பொதுமக்களைப் பாதிக்கும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு துணைபோக முடியாதென்றும் அழுத்தமாகத் தெரிவித்தனர். அவர்களின் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் முகாமிட்டுள்ள சுகாதார அமைச்சின் விசாரணைக்குழு, பணிப்பாளரிற்கெதிரான ஆரம்ப கட்ட விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews