சுற்றுலா பயணிகள் மேற்கொண்ட ஹோட்டல் பதிவுகளில் 45 சதவீதம் இரத்து.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் மேற்கொண்ட ஹோட்டல் முன்பதிவுகளில் சுமார் 45 சதவீதமானவை போராட்டங்கள் காரணமாக திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இது சுற்றுலாத் துறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் எரிபொருள் பற்றாக்குறை, எரிவாயு மற்றும் மின்வெட்டு ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவதற்கு மற்றொரு முக்கிய காரணியாக மாறியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

இம்மாதம் இதுவரையான காலப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகை பத்து வீதத்தால் அதிகரித்துள்ளது. இம்மாத்தின் இதுவரையான காலப்பகுதியில் 42,925 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். வார நாட்களில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் சராசரி எண்ணிக்கை 1533 ஆகவுள்ளது.

வார இறுதி நாட்களில் 1900 என்றளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

பொதுவாக ஓகஸ்ட் மாதம் என்பது இலங்கைக்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகை தரும் காலமாகும். எனவே அந்தக் காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு வரவழைக்கும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கண்டி பெரஹெராவை இலக்காகக் கொண்டு சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்துக்கு எரிபொருள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்துகொடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் பிரிட்டனிலிருந்தே அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். குறித்த நாட்டிலிருந்து சுமார் 8,304 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்பிறகு, இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். அங்கிருந்து வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 5,416 ஆகும்.

இதற்கு மேலதிகமாக ஜேர்மனி, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர் என்று, அதிகார சபையின் தலைவர் தம்மிக்கா விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews