கட்டுறுதியான அரசியல் இயக்கமே இன்று அவசியம்……..!அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றுக்கொண்டு ஆதரவு வழங்கினர் என்ற குற்றச்சாட்டு  இன்று தமிழ் மக்கள் மத்தியில் பலத்த உரையாடலை உருவாக்கியுள்ளது. ஒரு தரப்பு ரணிலிடமும், மற்றய தரப்பு டளஸ் அழகப்பெருமாவிடமும் பணம் வாங்கியுள்ளனர் என்றே பேசப்படுகின்றது. தேர்தல்கள் வரும்போதெல்லாம் இவ்வாறான செய்திகள் வருவது வழக்கமானதே! இவற்றை ஊர்ஜிதப்படுத்துவதும் கடினமானதே! உத்தியோக பூர்வ செயற்பாடுகள் மூலம் இவை இடம்பெறுவதில்லை என்பதால் தான் நிரூபிப்பதில் கடினத்தன்மை ஏற்படுகின்றது. சிலவேளைகளில் தவறான தகவல்களும், மிகைப்படுத்தப்பட்ட தகவல்களும் வருவதுண்டு. புறக்கணிப்புக்கும் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது என்ற வேறோர் தகவலும் உண்டு.


இந்தத் தடவை சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தேர்தல் விவகாரத்தில் பணப் பேரம் நடந்திருக்கின்றது எனக் கூறியிருக்கின்றனர். ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமாரதிசாநாயக்கா, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனரத்ன என்போர் பகிரங்கமாகக் கூறியிருக்கின்றனர். தேர்தல் முகவராக இருந்த ஹரீன் பெர்ணாண்டோ கூட்டமைப்பைச் சேர்ந்த ஐவரும் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 14 பேரும் ரணிலுக்கு வாக்களித்துள்ளதாக கூறியிருக்கின்றார். சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர் கட்சியின் முடிவுக்கு மாறாக வாக்களித்துள்ளனர் என கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகரா கூறியிருக்கின்றார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பணத்திற்காக வாக்களித்துள்ளனர் என்பது உண்மையாயின் தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரை அது மாபெரும் குற்றமாகும். இங்கு தமிழ் மக்களை விலைபேசி விற்பது இடம்பெற்றிருக்கின்றது. இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் தமிழ்த் தேசிய அறநெறிகள், தமிழ் மக்களின் சுய மரியாதை, கட்டுறுதியான அரசியல் சமூகம் என்பவற்றை மீறியுள்ளனர் என்றே கூற வேண்டும். இந்தப் போக்கு தமிழ்த் தேசிய அரசியலை அக ரீதியாக சிதைக்கும் என்பதால் இதில் சம்பந்தப்பட்டவர்களை அரசியல் அரங்கிலிருந்து அகற்றுவதும் அவசியமானதாகும்.


இவ்வாறான செயற்பாடுகள் முஸ்லீம், மலையக அரசியலில்தான் அதிகம் இடம்பெறுவதாக முன்னர் பேசப்பட்டது. தமிழ் மக்களின் அரசியல் கொள்கைவழி போராட்ட அரசியலாக இருப்பதனால் முன்னர் பெரியளவிற்கு இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதில்லை. இந்த நிகழ்வுகள் உண்மையாயின் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் நோய் வந்துவிட்டது என்றே கூற வேண்டும். இந்த நோய் சாதாரண நோய் அல்ல. ஒருவகைப் புற்றுநோய். இதைக் கண்டுபிடித்து அறுவைச்சிகிச்சை மூலம் உடனடியாக அகற்றாவிட்டால் நோய் உடலெங்கும் பரவி இறுதியில் தமிழ்த் தேசிய அரசியலையே இல்லாமல் செய்துவிடும்.
இப் பணப்பேரத் தகவல்கள் உண்மையோ, பொய்யோ எதுவாக இருந்தாலும் எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறாமல் தடுக்க தமிழ்த் தேசிய அரசியல் தற்பாதுகாப்பு நிலையை எடுக்கவேண்டியது அவசியமானதாகும்.

இவை இடம்பெறுவதற்கு பிரதான காரணம் கட்டுறுதியான அரசியல் இயக்கமும், கட்டுறுதியான அரசியல் சமூகமும் இல்லாமையே! எனவே எதிர்காலத்தில் கட்டுறுதியான அரசியல் இயக்கத்தையும் அதன்வழி கட்டுறுதியாக அரசியல் சமூகத்தையும் உருவாக்குவது பற்றியே அதிகம் யோசிக்க வேண்டும்.
கட்டுறுதியான அரசியல் இயக்கத்திற்கு தெளிவானதும் உறுதியானதுமான அரசியல் இலக்கு, அதற்கான அடிப்படைக் கொள்கைகள,; நீண்டகால குறுகியகால வேலைத்திட்டங்கள், வலுவானதும் உறுதியானதுமான நிறுவனக் கட்டமைப்பு, கொள்கைப்பிடிப்பும், வினைத்திறனுள்ள செயற்பாட்டாளர்கள், அர்ப்பணமும் தியாகமும் மிக்க தலைமை என்பன அவசியமானதாகும்.


தேர்தல் அரசியலும், அதன்வழியான பாராளுமன்ற அரசியலும் கொள்கைவழிச் செயற்பாட்டிற்கு எதிரானவையாகும். தேர்தல் அரசியலின் இருப்பு வெறுமனவே கொள்கைவழிச் செயற்பாட்டில் தங்கியிருப்பதில்லை. கதிரைகள்  இங்கு முக்கியமாக இருப்பதனால் கொள்கைப் பிறழ்வுகளும், சமரச அரசியலும் இங்கு தாராளமாக இடம்பெறுவதற்கு வாய்ப்புக்கள் இருக்கும். தேர்தல் செலவுகளுக்கு பெரும் தொகைப்பணம் தேவை என்பதால் எந்தவகையிலாவது பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கு தேர்தல் அரசியல்காரர்கள் முனைப்புக்காட்டுவர். எனவே கொள்கைவழி அரசியலை முன்னெடுக்கும் பெறுப்பை தேர்தல் அரசியல்வாதிகளிடம் ஒப்படைக்க முடியாது. தேர்தல் அரசியலில் ஈடுபடாத தேசிய அரசியல் இயக்கத்திடமேயே அது ஒப்படைக்கப்படல் வேண்டும். தேசிய அரசியல் இயக்கத்தின் அதிகாரத்தின் கீழ் அதன் ஒரு பிரிவாகவே தேர்தல் அரசியல் செயற்பாடு இடம்பெற வேண்டும்.


தேசிய அரசியல் இயக்கத்திற்கு தமிழ் மக்களின் அனைத்து விவகாரங்களையும் உலகம் தழுவிய வகையில் முன்னெடுக்க வேண்டிய கடமையுண்டு. தேர்தல் அரசியல் கட்சியினால் இந்தப் பணியினை ஒருபோதும் முன்னெடுக்க முடியாது. அவை தேர்தல் நலன்களுக்கு பயன்படக்கூடிய பணிகளில் மட்டுமே கவனத்தைக் குவிப்பனவாக இருக்கும்.
தேர்தல் அரசியல் கட்சிகளினால் கொள்கைகளை முரணின்றி கொண்டுசெல்லவும் முடியாது. தேர்தல் நலன்களுக்காக சில கொள்கைகளை சமரசம் செய்யவும் வேறு சில கொள்கைகளில் எதிர்நிலையெடுக்கவும் அது முற்படும். உதாரணமாக ஜே.வி.பி ஒரு இனவாதக் கட்சியல்ல ஆனால் தேர்தல் நலன் இனவாத்தைக் கையிலெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அதற்கு உருவாக்கியுள்ளது. அதேபோல தமிழ்த் தேசியக் கட்சிகள் பலவற்றில் உள்ளுராட்சிச் சபைத் தேர்தலின்போது சாதிவாதம் மேலோங்கியிருந்தது.

சாதிபார்த்து வேட்பாளர்களை நியமித்ததும் இடம்பெற்றன. ஒருதீவிர தமிழ்த் தேசியக் கட்சியிடம் இதுபற்றிக் கேள்விகேட்டபோது “இது சமூகப் பிரச்சினை நாம் என்ன செய்வது” என கையை விரித்தனர். தேர்தல் நலன்களுக்காக சாதி ஒழிப்பு என்ற கொள்கையை கைவிட அவர்கள் தயாராக இருந்தனர்.
எனவே இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு வரும்வரை இறுக்கமான கொள்கைவழி அரசியலை முன்னெடுக்கவேண்டியிருப்பதனால் ஒரு தேசிய அரசியல் இயக்கத்தினை கட்யெழுப்புவதிலேயே தமிழ் மக்கள் கவனம் செலுத்த வேண்டும். அதன் ஒரு பிரிவாக அரசியல் கட்சி ஒன்றினைக் கட்டியெழுப்பலாம். கொள்கைவழி அரசியலையும் அதன்வழியான கொள்கைவழி அரசியல் இயக்கத்தையும் கட்டியெழுப்பாமல் கட்டுறுதியான அரசியல் இயக்கத்தை உருவாக்க முடியாது. இந்தக் கட்டுறுதியான அரசியல் இயக்கம் இல்லாமல் கட்டுறுதியான அரசியல் சமூகத்தையும் உருவாக்க முடியாது. இங்கு கட்டுறுதியான அரசியல் சமூகம் என்பது ஒரே அரசியல் இலக்கில் கூட்டாக பயணிக்கும் அரசியல் சமூகமாகும். அரசியல் இயக்கம் என்பது ஒரு குடும்பத்தின் பெற்றோர் ஸ்தானத்தைப் போன்றதாகும். பெற்றோர் முன்மாதிரியாக நடக்காமல் முன்மாதிரியான பிள்ளைகள் உருவாகுவார்கள் என எதிர்பார்க்க முடியாது.


இப்போதுள்ள பிரச்சினை இன்றைய சூழலில் இதனை எவ்வாறு முன்னெடுப்பது என்பதே! இதற்கு முதலில் அரசியல் கட்சிக்கு வெளியே கட்சி சாராதவர்களை உள்ளடக்கி தமிழ்த் தேசியத்தளம் ஒன்றை உருவாக்க வேண்டும். பின்னர் இத்தளத்தை வழிநடாத்த கட்டுறுதியான ஒரு தேசிய அரசியல் இயக்கத்தை உருவாக்குதல் வேண்டும். தொடர்ந்து இதன் அதிகாரத்தின் கீழ் செயற்படக்கூடிய வகையில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும். இக் கட்சிகள் தங்களது கட்சி அடையாளங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அடையாளத்தின் கீழ் செயற்படுவதற்கு தூண்டுதல்களை அளிக்க வேண்டும். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கூட்டணியின் கட்சியாக பதிவுசெய்வதும் அவசியமானதாகும்.


தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் செயலாளரும் தேர்தலில் போட்டியிடாதவர்களாக இருக்க வேண்டும். ஜே.வி.பியில் முன்னர் தலைவரும், செயலாளரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை. தற்போது தலைவர் மட்டும் போட்டியிடுகின்றார் செயலாளர் போட்டியிடுவதில்லை. கொள்கை அரசியலில் கட்சியினை உறுதியாக நிலைக்கவைக்க இந்த ஒழுங்கு உதவக்கூடியதாக இருக்கும். தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை தலைவர் தேர்தலில் போட்டியிடுவதில்லை.


தவிர பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் ஊழியர்கள் என்ற நிலையிலேயே இருக்க வேண்டும். அவருடைய உறுப்பினர் பதவிகூட கட்சி உறுப்பினர் என்ற வகையிலேயே அவருக்கு கிடைத்தது. எனவே அதன்மூலம் கிடைக்கின்ற வரப்பிரசாதங்களை அவர் கட்சிக்கே அளிக்க வேண்டும். கட்சி அவரின் தேவைக்கேற்ப வசதிகளை உருவாக்கிக் கொடுக்கலாம். குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினருக்கான வேதனத்தை அவர் கட்சிக்கே வழங்க வேண்டும். கட்சி அவருக்கான உதவித் தொகைகளை வழங்கலாம். ஜே.வி.பி யில் இந்த ஒழுங்குமுறையே பின்பற்றப்படுகின்றது. தேர்தல் செயற்பாட்டை கட்சியே முன்னெடுப்பதால் வேட்பாளர் தனது சொந்த நிதியினை செலவிட வேண்டிய தேவையில்லை.


இந்த ஒழுங்கு முறையினை பின்பற்ற தமிழ்த்தேசியக் கட்சிகள்  முன்வராவிட்டால் தமிழரசுக் கட்சியை அவ்வாறு மாற்றலாமா? என முயற்சிக்க வேண்டும். தற்போதுள்ள தமிழ்க் கட்சிகளில் வடக்கு-கிழக்கு முகமுள்ள கட்சியும் ஓரளவிற்காவது நிறுவனத்தன்மை கொண்ட கட்சியும் தமிழரசுக் கட்சிதான். அதனை மாற்ற முடியுமாயின் புதிய கட்சியை உருவாக்க வேண்டிய தேவை இருக்காது.


தமிழரசுக் கட்சியும் அதற்கு முன்வராவிட்டால் புதிய கட்சி ஒன்றை உருவாக்குவதைத்தவிர வேறு தெரிவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அவ்வாறான முயற்சி ஒன்று தமிழ்த் தரப்பிலும் இடம்பெறத்தொடங்கியுள்ளது. ஒரே நேரத்தில் தேசிய அரசியல் இயக்கத்தையும் அரசியல் கட்சியையும் கட்டியெழுப்பும் முயற்சியில் சிலர் இறங்கியுள்ளனர். அந்தக் கட்சியில் தலைவர், செயலாளர், மட்டுமல்ல செயற்குழு உறுப்பினர்களும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவையும் அவர்கள் எடுத்துள்ளனர்.
தற்போது அதி தேவையானது முறைமை மாற்றமே!

Recommended For You

About the Author: Editor Elukainews