சிங்கள பௌத்த அரசை அகற்றி பன்மைத்துவ அடையாளம் கொண்ட அரசினை உருவாக்குவது தான் இன்றைய நிலைக்கு தீர்வு….! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

இலங்கை நெருக்கடி மிக மோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கின்றது. எரிபொருள் கிடைப்பதற்கான மார்க்கங்கள் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. திரும்ப வராது என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கடன் கொடுப்பதற்கு யார்தான் முன்வருவார்கள். இரக்கத்தின் அடிப்படையில் நன்கொடையாக கிடைப்பதுதான் தற்போது வந்துகொண்டிருக்கின்றது. இந்தியா தனது கொல்லைப்புறத்தில் அமைதியின்மையை விரும்பவில்லை என்றாலும் அதன் உதவிக்கும் எல்லையுண்டு. அமைச்சர்களின் ரஸ்யா, கட்டார் பயணங்களும் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு.


மறுபக்கத்தில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும், படையினருக்கும் சம்பளம் கொடுப்பதற்காக மாதம் தோறும் பணம்; அச்சடிக்கப்படுகின்றது. சென்ற மாதமும் 4000 கோடி அச்சடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அந்நியச் செலாவணியாக டொலரோ, தங்கமோ இல்லாத நிலையில் பண அச்சடிப்பு மாதம் தோறும் பணவீக்கத்தையே அதிகரிக்கச் செய்யும். இதனால் மாதம் தோறும் பொருட்களின் விலை உயர்வடைந்து செல்கின்றது. இந்த வாரத் தகவலின்படி பணவீக்கம் 54.6 வீதமாக உள்ளது. உணவுப் பணவீக்கம் 80 வீதமாக உள்ளது உலகிலேயே பண வீக்கம் அதிகம் உள்ள நாடு சிம்பாவேதான். இலங்கை அதற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளது.

அரச கட்டுமானங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து உதிரத் தொடங்கியுள்ளன. அரச திணைக்களங்கள், நீதிமன்றங்கள், பாடசாலைகள் என்பவற்றை நடாத்த முடியவில்லை. சோசலிச சமூகத்தில் இருந்து கம்யூனியஸ் சமூகத்திற்கு சமூகம் மாறும் போது அரசு கொஞ்சம் கொஞ்சமாக உலர்ந்து உலர்ந்துவிடும் எனக் கூறினார் கால்மாக்ஸ்.

அந்த அரசு உதிர்தல் தான் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் கம்யூனியஸ் சமூகத்திற்காக அல்ல. சிலவேளை சிங்கள பொளத்த அரசின் இந்த உதிர்வு எதிர்காலத்தில் அனைத்து அடையாளங்களையும் இணைத்த பன்மைத்துவ அரசிற்கு வழிகோலலாம்.
எரிபொருள் நிலையங்கள் முன்னால் தவமிருந்த மக்கள் தற்போது யதார்த்தத்தைத் புரிந்து மாற்று வழிகளைத் தேடத் தொடங்கியுள்ளனர். கவனிப்பாரற்றுக்கிடந்த துவிச்சக்கர வண்டிக்கெல்லாம் மவுசு ஏற்படத் தொடங்கியுள்ளது.  துருப்பிடித்த சைக்கிள்கள் கூட 20,000 ரூபா வரை விலைக்கு வருகின்றன. சைக்கிள் திருத்தும் கடைகளில் ஒரே சனக் கூட்டம். திருத்துனர்கள் இரவு பகலாக பணிபுரிகின்றனர். நேரம் போதாமல் ஒரு வார அவகாசம் கேட்கிறார்கள்.

யாழ் நகர சைக்கிள் கடைளில் புதிய சைக்கிள்களை பெரியளவிற்கு காணோம். இருப்பவை கூட 60,000 ரூபா வரை விலை போகின்றது. விலை மேலும் அதிகரிக்கலாம் என்பதால் பதுக்கல்களும் அதிகரிக்கின்றன. மீட்பர்களாக வந்தவர்கள் சோர்ந்துபோயுள்ளனர். பசில் அமெரிக்காவிற்கே சென்றுவிட்டார் ரணில் தற்போதும் சோதிடம் கூறிக்கொண்டிருக்கிறார். அட்சய பாத்திரம் எதுவும் அவரிடம் இல்லை. ஆட்சி மாற்றம் கேட்கும் எதிர்கட்சிகளிடமும் முறையான திட்டங்கள் எதுவும் இல்லை. அரசாங்கத்தை மாற்றுவதால் அனைத்தையும் மாற்றலாம் என்ற மாயையிலேயே உள்ளனர். இந்த  மாயை உண்மையென்றால் ரணில் எப்போதோ தீர்த்துவைத்திருப்பார். ரணிலைப் போன்ற மேற்குலக வசீகரம் கொண்ட எவரும் தென்னிலங்கையில் இல்லை. அவரே கையை விரிக்கத் தொடங்கியுள்ளார்.


இது அரசாங்கம் பற்றிய பிரச்சினையல்ல. அரசு பற்றிய பிரச்சினை. சிங்கள தேசம், தமிழ்தேசம், மலையக, முஸ்லீம் தேசம்.  இந்தியா, சீனா, அமெரிக்கா என்பவற்றின் நலன்களுக்கிடையிலான மோதலே இந்த நெருக்கடி. இதற்கான தீர்வு இந்த நலன்கள் சந்திக்கும் புள்ளிதான். இதில்மைய விவகாரம் சிங்கள – பௌத்த அரசும் அதன் விளைவான இனப்பிரச்சினையும் தான். புவிசார் அரசியல் காரரும், பூகோள அரசியல்காரரும் இனப்பிரச்சினையைக் காட்டி உள்ளே நுளைந்து இன்று அகற்ற முடியாத நலன்களின் பங்காளிகளாகியுள்ளனர்.
எனவே இங்கு தீர்விற்கான முதல் நிபந்தனை சிங்கள – பௌத்த அரசை அகற்றி அந்த இடத்தில் பன்மைத்துவ அடையாளம் கொண்ட அரசினை உருவாக்குவது தான். சிங்கள பௌத்த அரசு மேற்குலக எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பில் கட்டியெழுப்பப்பட்டுள்ளமையினால் சிங்கள பௌத்த அரசை அகற்றாமல் புவிசார் அரசியல்காரர்களினதும், பூகோள அரசியல் காரர்களினதும் நலன்களைப் பேண முடியாது. இந்த உண்மை சிங்கள தேசத்தின் அரசியல் சக்திகளுக்கு தெரியாததல்ல. ஆனால் அவர்கள் மாறுவதற்குத் தயாராக இல்லை. இது வரலாறு, மதம், ஐதீகம் என்பவற்றினால் கட்டப்பட்ட பெரிய மலை. அந்த மலையை உடனடியாக சரிக்க முடியாது. மாபெரும் கலாச்சார மாற்றம் சிங்கள தேசத்தில் இடம்பெற வேண்டும். இதற்கான அடையாளங்கள் கூட இன்னமும் தெரியவில்லை.
உண்மை என்னவென்றால் நிலைமை தற்போதைக்கு மாறக் கூடிய நிலை இல்லை. தமிழ்த் தரப்பு தற்காப்பு நிலையை நோக்கி நகர வேண்டும்.

சிறீலங்கா அரசாங்கத்தை இனி எவற்றுக்கும் நம்பியிருக்க முடியாது. அது தன்னையே பாதுகாக்க திராணியற்று இருக்கின்றது. தமிழ் மக்கள் தமக்கான வழியை தாங்களே தேட வேண்டும். துரதிஸ்டவசமாக தமிழ்க் கட்சிகள் கையறு நிலையில் உள்ளன. எதற்கும் உதவாத சாக்குகள் எனலாம். அரசாங்கத்தை மட்டுமல்ல தமிழ்க் கட்சிகளை நம்பியும் இனி எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை.


மக்கள் தாங்களாகவே அதிகாரங்களைக் கையில் எடுக்க வேண்டும். மக்கள் அதிகார மையங்களை கிராமங்களில் உருவாக்கி மக்களை பாதுகாக்க முன்வர வேண்டும். அபிவிருத்திப் பொருளாதாரம் தற்போது வேண்டாம். தற்காப்புப் பொருளாதாரமே தேவை. சுய சார்புக் கிராமங்களை உருவாக்குவதன் மூலம் தற்காப்பு நிலையை பேண முயற்சிக்க வேண்டும். தனித்தனி வாழுதல் என்ற தமிழனின் இயல்பான வாழ்க்கை முறை புதிய சூழலுக்குப் பொருந்தாது. கூட்டு வாழ்க்கையை நோக்கி நகர வேண்டும்.
முதலில் சமூக முக்கியஸ்தர்கள், மதத் தலைவர்கள், கல்வியாளர்கள் என்போரைக் கொண்டு கிராமமட்டத்தில் அதிகார மையங்களை உருவாக்கலாம். கிராமத்தில் அனைத்து விவகாரங்களையும் இந்த அதிகார மையங்கள் பார்க்கக் கூடிய நிலையை உருவாக்க வேண்டும். ஒரு வகையில் கிராமிய அரசாங்கம் எனக் கூறலாம். கிராமத்திற்கென பொது நிதியத்தையும் உருவாக்கலாம். கல்வி, பொருளாதாரம், சமூக ஒழுங்கு அனைத்தையும் பார்ப்பதாக இந்த அதிகாரங்கள் இருக்க வேண்டும்.


இதன் வளர்ச்சி நிலையில் கிராம அதிகார மையங்களை இணைத்து பிரதேசசபை மட்டத்தில் பிரதேச அதிகார மையங்களையும் பின்னர் பிரதேச அதிகார மையங்களை இணைத்து மாவட்ட அதிகார மையங்களையும் தொடர்ந்து மாவட்ட அதிகார மையங்களை இணைத்து தேசிய அதிகார மையத்தையும் உருவாக்கலாம்,
மேலிருந்து கீழ்நோக்கிப் பயணித்தல் பெரிய பயன்களை வரலாற்றில் பெற்றுத்தரவில்லை. எனவே கீழிருந்து மேல்நோக்கி பயணிப்பதே தற்போது உசிதமானது. கிராமிய அதிகார மையங்களில் இருந்து தேசிய அதிகார மையத்தை நோக்கி நகரலாம். தேசிய அதிகார மையம் சிங்கள தேசத்துடனும், பிராந்திய சர்வதேச சக்திகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தலாம். தற்போது அவசியமானது தமிழ் மக்களின் அடிப்படை பொருளாதாரமான விவசாயத்தையும், கடற்தொழிலையும் பாதுகாப்பதே. இதன் எரிபொருட் தேவைக்கு புலம்பெயர் மக்களின் உதவியுடன் இந்தியாவையும், தமிழ்நாட்டையும் நாடலாம். தமிழ் நாட்டிலிருந்து பெறப்படுகின்ற எரிபொருட்களை இலவசமாக பெறத் தேவையில்லை. அதனை வர்த்தகமாகவே மேற்கொள்ளலாம். இதற்கான வரிகளைக் கூட இலங்கை அரசிற்கு வழங்கலாம். இந்தப் பொருளாதார நடவடிக்கைகளை கையாள்வதற்கு நிபுணத்துவம் வாய்ந்த பொருளாதார வல்லுனர்களை ஈடுபடுத்துவது நல்லது.


காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கும் இடையே பயணப் போக்குவரத்துக்கு படகுகளை செயற்பட விட்டாலே தமிழ் மக்களின் நிலை சுமூக நிலைக்கு வந்துவிடும். நாணய பரிமாற்றம் ஒரு பிரச்சினையாக வரலாம். தமிழ்த் தரப்பு இந்திய ரூபாவிலோ அல்லது டொலரிலோ வர்த்தகம் செய்வதற்கு தயாராக வேண்டும். இது உடனடிப் பிரச்சினை. மறு பக்கத்தில் சிங்கள தேசத்தைக் கையாள்வதற்கும், பிராந்திய, சர்வதேச சக்திகளைக் கையாள்வதற்கும் நிறுவன ரீதியான ஒழுங்குமுறைகள் தேவை. இவற்றிற்கு தனித்தனி லொபிகளை உருவாக்குவது நல்லது.
தற்போதைய உடனடித் தேவை புதிய சூழலை எதிர்கொள்வதற்கான வழி வரைபடத்தை வரைவதே! வரைவோமா?

Recommended For You

About the Author: Editor Elukainews