இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஜூலை 11 மற்றும் 15ம் திகதிகளுக்கு இடையில் 38,000 மெட்ரிக் தொன் டீசல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஜூலை 22 ஆம் திகதி வரை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பெட்ரோல் கிடைக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது 11,000 மெட்ரிக் தொன் டீசல், 5,000 மெட்ரிக் தொன் பெற்றோல், 30,000 மெட்ரிக் தொன் உலை எண்ணெய் மற்றும் 800 மெட்ரிக் தொன் விமான எரிபொருள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
புதிய எரிபொருள் கப்பல் நாட்டிற்கு வரும் வரை தற்போதுள்ள டீசல் கையிருப்பு அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்று சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதனிடையே அடுத்த நான்கு மாதங்களுக்கு லிட்ரோ நிறுவனம் 100,000 மெட்ரிக் தொன் எரிவாயுவைக் கொள்முதல் செய்யும் என்றும், ஜூலை 6, 10, 16, 19, 21, மற்றும் 31 ஆகிய திகதிகளில் எரிவாயு வரும் என்பதால் எரிவாயு விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்றும் அவர் கூறினார்.
எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் கொள்வனவு தொடர்பான உடன்பாட்டை எட்டுவதற்கு ஜனாதிபதிக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் தொலைபேசி உரையாடலை மேற்கொள்வதற்கு வசதியாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவருடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஜூலை 10 ஆம் திகதிக்குப் பிறகு தொடர்ந்து எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்கான விரிவான பொறிமுறையை அரசாங்கம் வகுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவிடமிருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தியப் பிரதமர், பெட்ரோலிய வள அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் தேசிய சொத்து எனவும், அதனை தனியார் மயமாக்குவதற்கு தமது கட்சி ஒருபோதும் இடமளிக்காது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று தெரிவித்துள்ளார்.