அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் மூலம் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை நோக்கி பயணிக்க முடியும்…..!சி.அ.யோதிலிங்கம்.

இலங்கையின் நெருக்கடி நாளுக்கு நாள் ஜெட்வேகத்தில் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. ஐ.நா நிறுவனங்கள் மிக மோசமான உணவுப்பற்றாக்குறை வரும் என அபாய அறிவிப்பைச் செய்துள்ளன. அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லாததினால் அரசாங்கம் மாதம் தோறும் பணத்தை அச்சடிக்க முயற்சிக்கின்றது. இவ்வாறு பணம் அச்சடித்தால் பணவீக்கம் ஏற்பட்டு எரிபொருட்களின் விலை மாதம் தோறும் உயரும். எரிபொருட்களின் விலை உயரும் போது ஏனைய பொருட்களின் விலையும் உயரும். இது சங்கிலித் தொடர்போல இடம்பெறுகின்றது.

இது வெறும் பொருளாதார நெருக்கடியல்ல. அரசியல் பொருளாதார நெருக்கடி. இந்த நெருக்கடியை உருவாக்கிய அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் மூலம் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை நோக்கி பயணிக்க முடியும். ஆனால் துரதிஸ்டவசமாக இந்த நெருக்கடியின் ஆதிவேர் பற்றிய உரையாடல் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. பக்க விளைவுகளைச் சீர்செய்வது பற்றிய உரையாடலே இடம்பெறுகின்றது. சிங்களத் தேசத்தை ஜனநாயகப்படுத்துவது என்பது பக்கவிளைவுகளுக்கு மருத்துவம் செய்வது தான். ஆதிவேருக்கு மருத்துவம் செய்வது என்பது முழு இலங்கைத் தீவையும் ஜனநாயகமயப்படுத்துவதுடன் தொடர்புடையது. இந்த நெருக்கடியின் ஆதிவேர் பன்மைத்துவ ஆட்சியை உருவாக்காமை தான். இதன் விளைவாகத்தான் நீண்ட நெடிய போர் ஏற்பட்டது.
கடன்வடிவிலான பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டது. கொள்ளளவுக்கு அப்பாற்பட்ட படையினரைப் போசிக்கவேண்டியுமேற்படாது. தமிழ், முஸ்லீம், மலையக மக்களை ஒடுக்குவதற்காக அதிகளவு நிதியை செலவிடவேண்டிய நிலைவந்தது. ஆதிவேர்ப் பிரச்சினைக்கு மருத்துவம் கண்டால் நாட்டிற்கான செலவீனமும் அரைவாசியாகக் குறைந்துவிடும். நாட்டிலும் அரசியல் ஸ்திர நிலை உருவாகும். அந்நிய செலாவணி பெருமளவில் உள்நோக்கி வருவதற்கும் வாய்ப்புக்கள் ஏற்படும்.

எனவே தீர்விற்கான நடவடிக்கைகள் இந்த ஆதிவேரை நோக்கியே நகர வேண்டும். இதை நோக்கி நகர்த்தப்படுகின்ற ஒவ்வொரு அரசியல் செயற்பாடுகளும் சிங்கள தேசத்தை மட்டுமல்ல முழு இலங்கைத் தீவையும் ஜனநாயகமயப்படுத்துவதாக இருக்க வேண்டும். முழு இலங்கைத் தீவையும் ஜனநாயகமயப்படுத்துவது என்பது தேசிய இனங்களின் பங்கேற்பு ஜனநாயகத்தை வலுப்படுத்துவதுதான்.
21 வது திருத்த முயற்சி ஒரு ஜனநாயகப்படுத்தல் முயற்சிதான் ஆனால் அது இலங்கைத்தீவை ஜனநாயகப்படுத்தும் முயற்சியல்ல. சிங்கள தேசத்தை மட்டும் ஜனநாயகப்படுத்தும் முயற்சி. சிங்கள தேசத்தை மட்டும் ஜனநாயகப்படுத்துவதால் நெருக்கடி தீர்வை நோக்கி பயணிக்க முடியாது.
21 வது திருத்தத்தில் அனைத்துத் தேசிய இனங்களுக்கும் போதிய பிரதிநிதித்துவத்தை  வழங்குவதுடன் தங்கள் சொந்த இனம் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தையும் வழங்க  வேண்டும். 21 வது திருத்த முயற்சி இது பற்றி பெரியளவிற்கு உரையாடவில்லை. இதனை முன் கொண்டு செல்ல வேண்டிய தமிழ்த்தேசியத் தலைமையும் இது பற்றி அக்கறைப்படவில்லை.
தமிழ்த்தேசியக்கட்சிகள் கூடி முடிவெடுக்க இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வந்த போதும் அவை பற்றிய தொடர் செய்திகள்  எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
தமிழ்த்தேசிய தலைமை பற்றி யாருக்கு சொல்லி அழுவது எனத் தெரியவில்லை. அரசியல் தலைமை என்பது ஒரு குடும்பத்தின் தந்தை ஸ்தானத்தை ஒத்தது. தந்தை பொறுப்பற்று ஊதாரித்தனமாக திரிந்தால் குடும்பமே நடுத்தெருவில் நிற்கும். தமிழ் அரசியலில் இதுவே இடம் பெறுகின்றது. அரசியல் தலைமை பொறுப்பற்று ஊதாரித்தனமாக திரிகின்றது. அதனால் இந்த நெருக்கடி மைதானத்தில் வினைத்திறனுடன் உள்நுழைந்து செயற்பட முடியவில்லை. மக்கள் சந்திக்கும் பொருளாதார நெருக்கடிக்கு திட்டங்களைத்தீட்டி செயற்பட முடியவில்லை. சர்வதேச அபிப்பிராயத்தில் உள் நுழைய முடியவில்லை. பொறுப்பற்ற தந்தை குடும்பத்தைப் பாராமல் மூலையில் சோம்பேறியாக படுத்துக் கிடப்பது போல படுத்துக்கிடக்கின்றது.
தமிழ் மக்கள் அரசியல் தலைமையிடம் பொறுப்புக்களை ஒப்படைக்க, அரசியல் தலைமை தனிநபரான சுமந்திரனிடம் பொறுப்புக்களை ஒப்படைத்தது.
சுமந்திரன் தமிழ் மக்களின் அரசியலைச் செய்வதற்கு பதிலாக சிங்கள தேசத்தின் அரசியலைச் செய்து கொண்டிருக்கின்றார். அவருக்கு தமிழ் அரசியலில் எந்த அக்கறையும் கிடையாது. சிங்கள அரசியலில் பிரமுகராகிறது பற்றி மட்டுமே அக்கறை.
இந்த நெருக்கடியை தமிழ் மக்களின் நிலை நின்று கையாளும் போது இதன் உள்ளார்ந்த அரசியல் பற்றி தூர தரிசனம் அவசியம். பெரும் தேசியவாதத்தின் லிபரல் அணி, பெரும் தேசியவாதத்தின் இனவாத அணி, ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் குறிப்பாக தமிழ் மக்கள், பூகோள அரசியல் காரர்களான அமெரிக்கா, சீனா, புவிசார் அரசியல்காரரான இந்தியா இந்த ஆறு பெரும் சக்திகளுக்கு இடையிலான மோதலே இன்றைய நெருக்கடியாகும். இந்த நெருக்கடிக்கான தீர்வு என்பது இந்த நலன்கள் சந்திக்கும் புள்ளியே ஆகும்.
இந்த நெருக்கடித் தீர்வில் தமிழ் மக்களும் ஒரு தரப்பு. இந்த உண்மை தமிழ் அரசியல் தலைமைக்கு கொஞ்சம் கூட புரியவில்லை. ஒரு தரப்பு என்றால் நெருக்கடி மைதானத்தில் தானும் ஒரு தரப்பாக தனது சொந்தக் கொடியில் விளையாட வேண்டும். பச்சைக் கொடியில் சென்று விளையாட முடியாது. அவ்வாறு விளையாடினால் தனித் தரப்பாக அடையாளப்படுத்த முடியாது.
முஸ்லீம் தேசியமும், மலையகத் தேசியமும் சுயாதீனத் தேசியங்களல்ல. அவை தனித்து விளையாட முடியாது. அதனால் பச்சைக் கொடியின் கீழ்தான் விளையாடுகின்றன. தனிக்கொடியின் கீழ் விளையாடக் கூடியவர்கள் பச்சைக் கொடியின் கீழ் விளையாட முற்படுவதன் மூலம் மலையக, முஸ்லீம் அரசியலையும் பலவீனப்படுத்த முயற்சிக்கின்றனர்.
அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும் இந்தியாவும் தமிழ் மக்கள் தனிக் கொடியின் கீழ் விளையாடுவதை விரும்பவில்லை. தமிழ் மக்களின் பேரம்பேசும் பலம் அதிகரித்துவிடும் என்பதற்காகவே அதனை விரும்பவில்லை. 2009 தொடக்கம் பச்சை அணியில் விளையாடுமாறே வற்புறுத்தி வந்தன. அந்த முயற்சி அவர்களுக்கு தோல்வியே! தமிழ்த்தரப்பை இணைத்ததன் மூலம் பச்சை அணியும் பலவீனப்படவேண்டிய நிலை ஏற்பட்டது. மறுபக்கத்தில் தமிழ்த் தரப்பு உலகம் தழுவிய வகையில் தன்னை தனித் தரப்பாக அடையாளப்படுத்தியது. புலம்பெயர் சக்திகள் இதற்காக கடுமையாக உழைத்தனர். கனடா பாராளுமன்றத்தில் ஏகமனதாக இன அழிப்புத் தீர்மானம் நிறைவேறும் அளவிற்கு அது முன்னேறியது.
சுமந்திரன் தற்போதும் பச்சை அணியில் விளையாடுவதிலேயே அக்கறை காட்டுகின்றார். தமிழ் மக்களின் அரசியலைச் செய்வதற்கு பதிலாக சிங்கள தேசத்தின் அரசியலைச் செய்கின்றார். அங்கு தன்னை ஒரு பிரமுகராக நிலைநிறுத்த முற்படுகின்றார். சுமந்திரன் பச்சை அணியில் விளையாட விரும்பினால் கூட்டமைப்பிலிருந்து விலகி தாராளமாக விளையாடட்டும். தமிழ்த் தேசியக் கட்சியிலிருந்துகொண்டு விளையாட முடியாது.
தமிழ்த் தரப்பு இன்று தனது முழு அரசியலையும் ஒழுங்குபடுத்தவேண்டியுள்ளது. தாயகத்தின் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்தல், தென்னிலங்கையின் நெருக்கடிக்கால அரசியலைக் கையாளுதல் சர்வதேச அரசியலைக் கையாளுதல் என மூன்று பெரும் பணிகளை ஆற்றவேண்டியுள்ளது.
இந்த மூன்று பணிகளையும் ஒருங்கிணைப்பதற்கு அரசியல் கட்சிகளிலிருந்தும் சிவில் தரப்பிலிருந்தும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களை தெரிவுசெய்து தலைமை வழிகாட்டல் குழு ஒன்றை உருவாக்கலாம்.
இந்தக் குழுவின் மூன்று பணிகளையும் கையாள தனித்தனிக் குழுக்களை நிபுணத்துவம் வாய்ந்தவர்களைக் கொண்டு உருவாக்கலாம்.
அரசாங்கம் நியமித்த ஆலோசனைக் குழுவில் அங்கம் வகித்த இந்திரஜித் குமாரசுவாமி வடக்கு – கிழக்கிற்கென தனியான பொருளாதார சபை ஒன்றை உருவாக்கும் படி அரசிற்கு சிபார்சு செய்துள்ளார். புலம்பெயர் மக்களின் டொலர் வருகையை ஊக்குவிப்பது அவரது நோக்கமாக இருக்கலாம். ஆனாலும் இது தமிழ் மக்களுக்கு சாதகமானதே! தமிழ் மக்களை பட்டினிச் சாவிலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு.
இதேபோல தென்னிலங்கையை கையாள்வதற்கும், நெருக்கடி மைதானத்தில் தமிழ் மக்கள் தனித்தரப்பாக விளையாடுவதற்கும் தனியான வழிகாட்டல் குழு தேவை.
சர்வதேச அரசியலையும், பிராந்திய அரசியலையும் கையாளப்போகும் குழுவில் புலம்பெயர் தரப்பையும் தமிழகத் தரப்பையும் இணைத்துக்கொள்ளலாம். புலம்பெயர் தரப்பு ஏற்கனவே இதற்கான பணிகளை ஆரம்பித்துவிட்டது.

தற்போது தமிழ் அரசியலுக்கு தேவையானது கதைக்காரர்கள் அல்ல! செயற்பாட்டாளர்களே!

Recommended For You

About the Author: Editor Elukainews