கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு!

இந்தியா – மேற்கு டெல்லி தீ விபத்தில் இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என டெல்லி சுகாதார துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இதுவரை 50 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
மின்ஒழுக்கு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில், ‘டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிர் இழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் தீ விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா 2 இலட்சம் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கட்டிடத்தில் இருந்து வெளியேற ஒரே ஒரு வழியே இருந்தது உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது. 28 பேரை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews