அரசிலிருந்து விலகிய 10 கட்சிகள் தமது நிலைப்பாட்டை சற்று முன்னர் அறிவித்தன!

அரசாங்கத்தில் இருந்து விலகிய 10 கட்சிகளும், தொடர்ந்தும் நாடாளுமன்றில் சுயாதீன அணியாக செயற்பட தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சதெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, கருத்து தெரிவித்த அவர், பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதன் மூலம் ஸ்திரத்தன்மை ஏற்படும் என்பதில் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நம்பிக்கை இல்லை.
இந்த நெருக்கடிக்கு ரணில் விக்கிரமசிங்கவும் பொறுப்புகூற வேண்டும்.
அவரது 4 வருடகால ஆட்சியின்போது 12 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடன்கள் பெறப்பட்டன என்று தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றிய அவர், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சில வாரங்களுக்கு முன்னர் பதவி விலகியிருந்தால், அவர் தலைமறைவாகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டார்.
அவர் இதற்கு முன்னர் பதவியில் இருந்து விலகியிருந்தால், அவரது விசுவாசிகள் வன்முறைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்.
ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, சனத் நிஷாந்த போன்றவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை அமைதியான முறையில் பதவி விலக அனுமதிக்கவில்லை.
அவரை பதவி விலகுமாறு நாங்கள் கோரினோம், ஏனெனில் இந்த நிலைமை ஏற்படும் என்பதை நாம் அறிந்திருந்தோம். பிரதமர் ராஜபக்ஷ பதவி விலக மறுத்ததால், நெருக்கடி தொடர்ந்து, மிக பயங்கரமான முடிவிற்கு வழிவகுத்தது.
புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏறக்குறைய அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தினோம். எனினும் துரதிஷ்டவசமாக அந்த கட்சிகள் எதுவும் சாதகமான பதிலை வழங்கவில்லை’ என விமல் வீரவன்ஸ மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews