இருதேசக் கோட்பாடு ஏற்கப்பட்டுவிட்டதா? சி.அ.யோதிலிங்கம்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாhளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் தாங்களாகவே எதிர்க்கட்சிக் காரியாலயத்திற்கு சென்று கையொப்பமிட்டுள்ளனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்னமும் கையெழுத்திடவில்லை, விக்கினேஸ்வரனும் கையெழுத்திடவில்லை, மலையக முஸ்லீம் கட்சிகளும்  இதுவரை கையெழுத்திட்டதாகத் தெரியவில்லை. ஏன் எதிர் முகாமிலுள்ள சிங்களக் கட்சிகள் பலவும்; கூட இன்னமும் கையெழுத்திடவில்லை. இந்நிலையில் தீவிர தமிழ்த்தேசியம் பேசும் முன்னணியினர் விழுந்தடித்துக்கொண்டு அதுவும் தாமாகவே எதிர்க்கட்சிக் காரியாலயத்திற்குச் சென்று கையெழுத்திட்டுள்ளனர். முன்னணியினரது இரு தேசக் கோட்பாட்டை சஜித்பிறேமதாசா அங்கீகரித்துவிட்டாரோ? ராஜபக்சாக்களை வீழ்த்தி பிறேமதாசாக்களுக்கு முடிசூட்டுவதற்காகத்தான் தமிழ் மக்கள் இவர்களுக்கு வாக்களித்தார்களோ? சஜித் முடிசூடினால் தமிழ் மக்களுக்கு விடிவுகாலம் வந்துவிடுமோ?
இங்கே இவர்களது அணுகுமுறையில் கோட்பாட்டுத் தவறுகளும் உண்டு. இராஜதந்திர தவறுகளும் உண்டு. கோட்பாட்டு ரீதியாக சஜித் அணி கோத்தா அணி இரண்டுமே பெரும் தேசியவாதக் கட்சிகள். ஓன்று பெரும் தேசியவாதத்தின் இனவாத முகம். வரலாற்று ரீதியாக ஒன்று தமிழ் மக்களின் முதுகில் குத்தியது. மற்றையது நெஞ்சில் குத்தியது எனவே இரண்டு அணிகளும் தமிழ் மக்களின் நண்பர்கள் அல்லர். இவர்கள் பரஸ்பர நலன்களின் அடிப்படையில் கையாள்வதற்கு உரியவர்கள். இவர்களுடனான எந்த உறவுகளும் நிபந்தனைகளின் அடிப்படையிலானதாகவே இருக்க வேண்டும்.
இந்த உண்மையை சரிவர புரிந்து கொள்ளாததினால் தான் நல்லாட்சிக் காலத்தில் ரணில் ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து கூட்டமைப்பு வெறுங்கையுடன் திரும்பி வந்தது. தேர்தலில் பின்னடைவுக்குச் சென்றதோடு தென்னிலங்கைக் கட்சிகள் தமிழர் தாயகத்தில் ஊடுருவுவதற்கும் காரணமாகியது. அதன் வழி தமிழ்த்தேசிய அரசியலையும் பலவீனமாக்கியது.
இரண்டாவது தற்போது இலங்கை அரசு பொருளாதார ரீதியாக அதள பாதாளத்தில் வீழ்ந்துள்ளது. இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் நாட்டில் நீண்ட காலமாக நிலவிவரும் இனப்பிரச்சினையே! ஏனையவை எல்லாம் துணைக்காரணிகள். பெருந்தொகைக் கடன்களை பெற வேண்டிய நிலையும் , நாட்டின் கொள்ளளவுக்கு மேலாக அதிக எண்ணிக்கையிலான இராணுவத்தை வைத்து கட்டி அழ வேண்டிய நிலையும் இனப்பிரச்சினையினாலேயே ஏற்பட்டது.
மறுபக்கத்தில் நாட்டில் ஸ்திரத்தன்மை பேணப்பட வேண்டும் என சர்வதேச சக்திகள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. இதன் அர்த்தமும் இனப்பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும். என்பதேயாகும் இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் இலங்கையர் என்ற அடையாளத்தை கட்டியெழுப்ப முடியாது. இவ் அடையாளம் கட்டியெழுப்பப்படாமல் முழு இலங்கையும் ஒரே இலக்கில் பயணித்து பொருளாதார நெருக்கடியைச் சீர்செய்து விட முடியாது.
எனவே தற்போதைய காலம் என்பது மிகக் கவனமாக கையாளப்படவேண்டிய காலம். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை ஒருங்கிணைத்து முன்வைத்து பேரம் பேசல் வேண்டிய காலம். இந்தக்காலத்தை தவற விட்டால் பிறிதொரு வாய்ப்பான காலத்திற்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டி வரும். தமிழ்த்தேசியக்கட்சிகள் தனித்தனியாகக் கையாண்டு வலுவான பேரம் பேச்சு நடாத்த முடியாது. கூட்டாக கையாள்வதன் மூலமே முன்னேற்றங்களைக் காண முடியும். இங்கே  தமிழ்த்தேசியக் கட்சிகள் கூட போதுமானது எனக் கூறி விட முடியாது. தமிழ்த்தேசமாக அணுகுவது அவசியம்
ஒரு பக்கத்தில் நிரந்தரத்தீர்வுக்கான பேச்சு வார்த்தையை நடாத்திக் கொண்டு இன்னோர் பக்கத்தில் இடைக்கால நிர்வாகத்தைப் பெற்று மக்களின் நலன்களைப் பாதுகாக்க முன்வருவதே இன்றைய காலத்தில் ஆரோக்கியமானதாக இருக்கும்.  அரசியல் தீர்வு வரும்வரை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாட நெருக்கடிகளை பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. ஆக்கிரமிப்புப் பிரச்சினை, பொருளாதார நெருக்கடியால் வரும் வறுமைப் பிரச்சினை , என்பவற்றை முகம்கொள்வதற்கு இடைக்கால நிர்வாகம் அவசியம். தமிழ் மக்களுக்கென ஒரு இடைக்கால நிர்வாகம் இருந்தால்’ புலம்பெயர் மக்களும் நம்பிக்கைகளுடன் முதலிட முன்வருவர். தமிழ் நாட்டின் முதலீட்டாளர்களையும் தமிழர் தாயகத்தில் முதலிடும்படி ஊக்குவிக்கலாம்.
இடைக்கால நிர்வாகம் மூலம் அரசியல் கைதிகளின் விடுதலை அவர்களுக்கான வாழ்வாதரங்களை உருவாக்கல், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நலன்கள் என்பவற்றிலும் முன்னேற்றங்களைக் காண முடியும். அரசியல் தீர்வுப் பிரச்சினை ஒரு அரசியல் யாப்புப் பிரச்சினையாகவும் இருப்பதால் அதனை நடைமுறைப்படுத்த கால தாமதங்கள் ஏற்படும.; ஆனால் இடைக்கால நிர்வாகத்தை ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கொண்டோ அல்லது பாராளுமன்றச் சட்டம் மூலமோ உருவாக்க முடியும்.
இவையெல்லாவற்றிற்கும் முன் நிபந்தனையாக இருப்பது உறுதியான அரசியல் நிலைப்பாடும் ஒருங்கிணைந்த அணுகுமுறையுமே! தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஒருதலைப்பட்;சமான செயற்பாடு இந்த அணுகுமுறையை முழுமையாகக்  குழப்பியுள்ளது.
சிங்கள தேசத்தின் இரண்டு அணிகளையும் கையாளும்போது தந்திரோபாய அணுகுமுறைகளும் அவசியமானதாகும். அதில் முதலாவது இரண்டு அணிகளிலிருந்தும் சமதூரத்தில் நிற்பதாகும். ஒரு அணி பக்கம் சார்பு நிலையை எடுத்தால் மற்றைய அணியைக் கையாள்வதில் நெருக்கடியைச் சந்திக்க வேண்டிவரும். நல்லாட்சிக் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் அரசாங்கத்தின் ஒரு பகுதியாகவே தன்னைக் காட்ட முயற்சித்தது இதனால் மற்றைய அணியை கொஞ்சம் கூட கையாள முடியவில்லை. புதிய அரசியல் யாப்பு முயற்சி படு தோல்வி அடைந்து கூட்டமைப்பு வெறும் கையுடன் திரும்பி வந்தமைக்கு பிரதான காரணம் இதுதான்.
இரண்டாவது கோத்தா அணி இனப்படுகொலையின் உச்சமான   உயிர்ப்படுகொலையைச் செய்த கட்சி அதற்கு பொறுப்புச் சொல்ல வேண்டிய கடமை உண்டு. எனவே அந்த அணிக்கு அழுத்தம் கொடுத்து தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வை நோக்கி நகர்வதே அதிகம் பொருத்தமானதாக இருக்கும்.
தவிர கோத்தா அணி பெருந்தேசியவாதத்தின் இனவாத அணி தமிழ் மக்களின் ஆதரவு அதற்கு பெரிதாக இல்லை. சஜித் அணி பெருந்தேசியவாதத்தின் லிபரல் அணி. இது தமிழ் மக்களின் ஆதரவினை கணிசமான அளவில் பெற்ற அணி. தென்னிலங்கைளில் வாழும் தமிழ் மக்கள் இதற்கே ஆதரவு வழங்கி வருகின்றனர். ஜனாதிபதி தேர்தல்களில் வட – கிழக்கு மக்களும் ஆதரவு வழங்குகின்றனர்.
எனவே கோத்தா அணி ஒரு தீர்வைக் கொண்டு வருமானால் இந்த அணி தனது எதிர்ப்பை அடக்கி வாசிக்கும்; சந்திரிக்காவின் தீர்வு யோசனையை ரணில் எதிர்த்த போதும் பண்டா-செல்வா ஒப்பந்தத்தை ஜே.ஆர் எதிர்த்தபோதும இருந்த  சூழல் இன்று குறைவு. மாறாக சஜித் அணி தீர்வைக் கொண்டு வந்தால் கோத்தா அணி நிச்சயம் குழப்பும்.  நல்லாட்சிக்காலத்தில் அதுவே நடந்தது. எனவே இந்த வகையில் பார்த்தாலும் கோத்தா அணி மூலம் தீர்வக்கு முயற்சிப்பதே அதிகம் பொருத்தமானதாக இருக்கும்.
எனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக் கோட்பாட்டு அடிப்படையிலும், தந்திரோபாய அடிப்படையிலும் மாபெரும் தவறுகளைச் செய்துள்ளது. இது தேர்தல் அரசியலுக்கு வருபவர்கள் எல்லாம் மெல்ல மெல்ல கொள்கை அரசியலை கீழிறக்கி விடுவார்கள் என்ற சந்தேகத்தையும் கிழப்பிவிட்டிருக்கின்றது. நல்லாட்சிக் காலத்தில் கூட்டமைப்பு ரணில் அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுக்கும் முயற்சியில் இறங்கி வெறும் கையுடன் திரும்பிவந்தது. அதேபோல தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் சஜித்துக்கு முட்டுக்கொடுக்கப் போய் வெறும்கையுடன் திரும்பிவரப் போகின்றதா?
தற்போது சிங்கள மக்கள் தாம் தெரிவுசெய்த ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தை நடாத்துகின்றனர். அதுவும் சிங்கள நடுத்தர வர்க்கமும், நகர்ப்புற வர்க்கமும் மட்டுமே களத்திலுள்ளது. கிராமப்புற மக்கள் இன்னமும் களத்திற்கு வரவில்லை. இப் போராட்டத்தின் ஒரு பகுதிதான் நம்பிக்கையில்hப் பிரேரணை. தமிழ் மக்களின் பிரச்சினை அரசாங்கத்தை மாற்றுவது அல்ல அதற்காக குத்தி முறியவேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இல்லை.

Recommended For You

About the Author: Editor Elukainews