ஆட்சி மாற்றம் மட்டும் நெருக்கடியைத் தீர்க்காது…! சி.அ.யோதிலிங்கம்.

இலங்கையில் அரசியல் நெருக்கடியும் பொருளாதார நெருக்கடியும் மரபு ரீதியாக நீண்டகாலமாக வளர்ந்து வந்த ஒன்றாகும். இதில் பொருளாதார நெருக்கடி இன்று அதி உச்சமாக வளர்ச்சியடைந்து பாரிய அரசியல் நெருக்கடியையும் தோற்றுவித்துள்ளது. யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நெருக்கடிகளை தற்போதைக்கு தீர்க்க முடியாது என்ற நிலையே உருவாகியுள்ளது.
இலங்கையின் பிரதான அரசியல் நெருக்கடி என்பது வரலாற்று ரீதியாக தொடர்ந்து வருகின்ற இனப்பிரச்சினை தான். பல இனங்கள் பல மதங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் அனைத்துத் தரப்பினரது அடையாளத்தையும் பேணக்கூடிய அரச அதிகாரக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக இதற்காக சிங்கள பௌத்தம் என்கின்ற ஒற்றை அதிகாரக் கட்டமைப்பே உருவாக்கப்பட்டது. இதன் கருத்து நிலை இலங்கைத்தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது ஏனையவர்கள் வேண்டுமானால் இலங்கையில் வாழ்ந்து விட்டுப் போகலாம் ஆனால் ஆட்சி அதிகாரக்கட்டமைப்பில் பங்கெடுக்கக் கூடிய ஒரு தேசிய இனமாக வளர்ச்சியடையக் கூடாது என்பதே! சிங்கள பௌத்தர்கள் அல்லாத ஏனையோரை இலங்கையில் வாழ விட்டதே சிங்கள பௌத்தர்களின் பெரும் தன்மைஎன்றும் அவர்கள் கருதுகின்றனர்;. இந்தக் கருத்து நிலை தான் இனப்பிரச்சினையின் அடி வேராகும்.
இனப்பிரச்சினையின் வளர்ச்சி நிலை இன அழிப்பாக மாறியது. கட்டமைப்பு சார் இன அழிப்பு ஒரு கட்டத்தின் பின்னர் உயிரழிப்பாக மாற்றம் பெறத் தொடங்கியது. முள்ளிவாய்க்கால் படுகொலைகள் இதன் உச்சமாகும். தமிழ் மக்களின் இது வரை காலப் போராட்டம் இந்த இன அழிப்பிலிருந்து பாதுகாப்பதான தற்பாதுகாப்புப் போராட்டமே! ஆகும். தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு இன்று முஸ்லீம்களுக்கு எதிராகவும், சிங்களவர் கிறீஸ்தவர்களுக்கு எதிராகவும் வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளது. இதனால் சிங்கள பௌத்த ஆட்சி அதிகாரக் கட்டமைப்புக்கு எதிராக தமிழர்கள் மட்டுமல்ல முஸ்லீம்களும்  சிங்களக் கிறீஸ்தவர்களும் போராட வேண்டிய நிர்ப்பந்த நிலை தோற்றம் பெற்றுள்ளது. பேராயர் மல்கம் றஞ்சித் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கதவைத் தட்டும் அளவிற்கு இந்த நிலை வளர்ந்து சென்றுள்ளது.
இன்னொரு பக்கத்தில் இந்த இனப்பிரச்சினை புவிசார் அரசியல் போட்டியில் அக்கறை உள்ள வல்லரசுகளின் போட்டிக்களமாகவும் இலங்கையை மாற்றியது. புவிசார் அரசியல்காரரான இந்தியாவும், பூகோள அரசியல்காரர்களான  அமெரிக்கா, சீனாவும் தத்;தம் நலன்களில் நின்று கொண்டு இலங்கையில் ஆதிக்கம் செலுத்துவதற்கு போட்டி போடத் தொடங்கியுள்ளன. உள்நாட்டில் எழுச்சியடைந்த இனப்பிரச்சினையும் அதன் விளைவாக வந்த புவிசார்  அரசியல் போட்டியும் மிகப் பெரும் அரசியல் நெருக்கடியை இலங்கையில் தோற்றுவித்தது.
அரசியல் நெருக்கடிக்கு சமாந்தரமாக பொருளாதார நெருக்கடியும் சுதந்திரமடைந்த காலத்திலிருந்து வளரத் தொடங்கின. சுதந்திரமடைந்த காலத்திலிருந்து நிலையற்ற தன்மையைக் கொண்ட விவசாயப் பொருளாதாரத்திற்கு கொடுத்த முக்கியத்துவம் கைத்தொழில் துறைக்கு கொடுக்கப்படவில்லை. இது பெரியளவு அந்நியச்செலாவணிக் கையிருப்பு வளர முடியாத நிலையைத் தோற்றுவித்தது. ஏற்றுமதிகள் குறைவாகவும் இறக்குமதிகள் அதிகமாகவும் வளர்ச்சியடைந்தன.
இனப்பிரச்சினை காரணமாக 30 வருட ஆயுதப் போர் இடம் பெற்றமையினால் அரசாங்கம் வகை தொகையின்றி கடன்களைப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. கைத்தொழில் துறை வளர்ச்சியடையாமல் கடன்களைப் பெற்றுக் கொண்டமை பொருளாதாரத்தில் பலவீனமான நிலையை உருவாக்கியது. போருக்குப்பின்னர். ஆட்சியமைத்த மகிந்தராஜபக்ச அரசாங்கம் மேலும் மேலும் கடன்களைப் பெற்று பொருளாதார ரீதியாக வருமானங்களைத் தராத துறைகளில் முதலிட்டது. கடன்களுக்கான நிதிக் கைமாற்றங்களில் பாரிய ஊழல் மோசடிகளும் இடம் பெற்றன. பாரிய கொரோணா நோயும் தன் பங்கிற்கு பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்தது. இவை எல்லாம் சேர்த்து மீட்சியே பெற முடியாத பெரும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கியவழளைவு கடலால் சூழப்பட்ட இலங்கை கடனால் சூழப்பட்ட இலங்கையாக மாறியது. இந்த மீள முடியா பொருளாதார நெருக்கடி மீள முடியா அரசியல் நெருக்கடியையும் தற்போது தோற்றுவித்துள்ளது. அரசாங்கம் நடைமுறையில் இல்லை என்ற நிலையும் உருவாகியுள்ளது. இந்த நெருக்கடிகளில் இருந்து மீள்வது இலகுவானதாக இருக்கப் போவதில்லை

இலங்கையில் சிங்கள பௌத்த  கருத்து நிலையே அதிகாரத்தில் உள்ளது. இலங்கை அரசின் உருவாக்கம் என்பது சிங்கள பௌத்த கருத்து நிலையை அடித்தளமாகக் கொண்ட ஒன்று தான். இந்த நிலைமை காரணமாக தென்னிலங்கையில் செயற்படும் சிங்கள அரசியல் கட்சிகள் அனைத்தும் சிங்கள பௌத்த கருத்து நிலைக்கு உட்பட்ட கட்சிகளாகவே உள்ளன. அணிகளாகப் பிரித்தால் சிங்கள அரசியலில் இரண்டு அணிகள் மேலாதிக்க நிலையில் உள்ளன. ஒன்று பெரும் தேசிய வாதத்தின் லிபரல் அணி. மற்றையது பெருந்தேசியவாதத்தின் இனவாத அணி. பெரும் தேசிய வாத லிபரல் அணிக்குள் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன உள்ளடக்கம். பெரும் தேசிய வாத இனவாத அணிக்குள் சிறீலங்கா சுதந்திரக்கட்சி  பொதுஜனமுன்னணி, மக்கள் விடுதலை முன்னணி, ஹெல உரிமைய என்பன உள்ளடக்கம். இரண்டு அணிகளும் பெரும்தேசிய வாத அணிகளாக இருப்பதால் தமிழ் மக்களின் நண்பர்கள் அல்ல. இரண்டுமே வரலாற்று ரீதியாக இன அழிப்பை மேற் கொண்டு வருபவை. இன அழிப்புக்கான அணுகு முறைகளில் மட்டும் வேறுபாடு இருக்கின்றது. ஒரு அணி முதுகில் குத்தும். மற்றைய அணி நெஞ்சில் குத்தும் என்பதே அந்த வேறுபாடு ஆகும்.
இரண்டும் பெருந்தேசிய வாத கட்சிகளாக இருப்பதனாலும் , இன அழிப்பை மேற்கொள்பவையாக இருப்பதனாலும், இக்கட்சிகளின் சார்பு நிலையை தமிழ் மக்களினால் எடுக்க முடியாது. இரண்டு அணிகளில் இருந்தும் சமதூரத்தில் நின்று கொண்டு அவற்றைக் கையாள்வது பற்றியே தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும். ஒரு அணியின் சார்பு நிலையை எடுத்தால் மறு அணியைக் கையாள்வதும் சிரமமானதாகிவிடும். எனவே தென்னிலங்கையின் போராட்டங்கள் தொடர்பாக தமிழ் மக்கள் மௌனத்தைக் கடைப்பிடிப்பதே பொருத்தமானதாகும். கோட்பாட்டு ரீதியாக சிங்கள மக்களை ஒரு பகுதியினராவது எமக்குச் சார்பாக வென்றெடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் எவையும் இல்லை. அதற்கான வாய்ப்புக்களையும் தமிழ்த்தரப்பு தேடுவதற்கு முயற்சிக்க வேண்டும்.
தென்னிலங்கையில் இடம்பெறும் போராட்டங்களுக்குப் பின்னால் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் இருக்கின்றது என்ற பார்வையும் உண்டு. தற்போதைய பிரச்சினையில் மேற்குலகத்தின் நிலைப்பாடு ஆட்சி மாற்றம் ஒன்றை உருவாக்குவது தான். தமிழ்த்தரப்பின் பிரச்சினைகளில் எந்தத் தீர்வையும் உறுதிப்படுத்தாத ஆட்சி மாற்றம் தமிழ் மக்களுக்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை. தவிர தமிழ் மக்களினுடைய விவகாரத்தை கொதிநிலையில் வைத்திருக்க வேண்டுமாயின் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் ஆட்சியில் இருப்பதே பொருத்தமானதாக இருக்கும். இங்கு பொறுப்புக்கூற வேண்டிய தரப்பு ராஜபக்ச ஆட்சியாளர்கள் தான். எனவே இவர்கள் ஆட்சியில் இருக்கின்ற போதே தமிழ் மக்களுக்கான வலுவான இருப்பை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.
தற்போதைக்கு தமிழ் மக்களுக்கான இடைக்கால நிர்வாகக் கோரிக்கையை முன்வைப்பதே அதிகம் பொருத்தமானதாக இருக்கும.; இந்த இடைக்கால நிர்வாகத்தை ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கொண்டோ, பாராளுமன்ற சட்ட மூலமோ உருவாக்கலாம்.
இந்த இடைக்கால நிர்வாகம் நான்கு காரணங்களுக்காக தமிழ் மக்களுக்கு தேவையானதாகும். ஒன்று அரசியல் தீர்வும், மாகாணசபைத் தேர்தலும் தற்போதைக்கு சாத்தியமில்லை. தற்போதைய நெருக்கடியால் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பட்டினிச்சாவுக்கும் உள்ளாக நேரிடும். இவற்றைத் தடுப்பதற்கு தமிழ் மக்களுக்கென சுயாதீனமான நிர்வாகம் அவசியமானதாகும்.
இரண்டாவது போர் முடிவடைந்த காலத்திலிருந்து தமிழ் மக்கள் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புக்கு பச்சை அணியும் நீல அணியும் விதிவிலக்கானதாக இருக்கவில்லை. இந்த ஆக்கிரமிப்பிலிருந்து தமிழர் தாயகத்தைப் பாதுகாப்பதற்கு இவ்வாறான அதிகாரக் கட்டமைப்பு அவசியமாகவுள்ளது.
மூன்றாவது அரசாங்கம் தமிழ் மக்களுக்கும் உதவும் நிலையில் இல்லை. நெருக்கடி குறைந்த காலத்தில் உதவாத அரசாங்கம் நெருக்கடி காலத்தில் உதவும் என எதிர்பார்க்க முடியாது. இந் நிலையில் சொந்த முயற்சிகள் மூலமே தமிழ் மக்கள் பொருளாதார ஆதாரங்களை தேட முடியும். இதற்கு முதல் நிலையில் பங்காற்றக்கூடியவர்கள் புலம்பெயர் மக்கள் தான். தமிழ் மக்களுக்கான ஒரு நிர்வாகம் இல்லாமல் புலம்பெயர் மக்கள் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள்.
நான்காவது தமிழகத்தின் உதவியைப் பெறுவதாகும் இந்த உதவி தமிழக அரசிடமிருந்தும், தமிழக முதலீட்டாளர்களிடமிருந்தும் பெறக் கூடியதாக இருக்கும். இந்த இரு  தரப்பினரும் ஏற்கெனவே தங்கள் விருப்பங்களை தெரிவித்துள்ளனர். தமிழ் மக்களுக்கென ஒரு நிர்வாகம் இல்லாமல் அவர்களின் பங்களிப்புகளையும் எதிர்பார்க்க முடியாது.
தற்போதைய நிலையில் தமிழ்த் தேசிய சக்திகள் ஆற்ற வேண்டிய பணி இடைக்கால நிர்வாகம் தொடர்பான உரையாடலை உடனடியாக ஆரம்பிப்பதுதான்.

Recommended For You

About the Author: Editor Elukainews