ரஷ்யாவை எதிர்க்க இந்தியா நடுங்குகிறது.. ஜோ பைடன் கடுமையான விமர்சனம் –

உக்ரைன் மீது போரிட்டு வரும் ரஷ்யாவை குவாட் நாடுகள் எதிர்க்கும் நிலையில் இந்தியாவோ நடுங்குகிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா 26 நாட்களுக்கு மேலாக போரிட்டு வருகிறது. இந்த போரை நிறுத்துமாறு ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன.

இது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலிலும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்தின் மீது ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியதால் அது நீர்த்து போனது. இந்த பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள உறுப்பினர்களில் இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை தவிர அனைத்து நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்தன.

ஆனால் இந்த 3 நாடுகளும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. இந்தியா நடுநிலையை கடைப்பிடிப்பதாக அறிவித்துவிட்டது. அதே நேரம் உடனடியாக சுமுக பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதையே விரும்புவதாக இந்தியா தெரிவித்துவிட்டது.

அது போல் ஐக்கிய நாடுகள் சபையிலும் இந்தியா வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனால் இந்தியா தொடர்ந்து ரஷ்யாவில் எண்ணெயை கொள்முதல் செய்து வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் சேர்ந்ததுதான் குவாட் அமைப்பு ஆகும்.

கடல் சார்ந்த பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில் குவாட் அமைப்பில் உள்ள 4 நாடுகளில் ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் ரஷ்யாவின் செயல்பாட்டை கடுமையாக கண்டித்துள்ளன. ஆனால் குவாட் நாடுகளின் நிலைப்பாட்டிற்கு எதிராக இந்தியா வேறு ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

உக்ரைனையும் ஆதரிக்காமல் ரஷ்யாவையும் எதிர்க்காமல் நடுநிலையான நிலைப்பாட்டை இந்தியா எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா மற்ற 3 குவாட் நாடுகளின் முடிவுகளுக்கு எதிராக உள்ளதாகவே பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்க அதிபர் ஜோபிடன் நேற்றைய தினம் கூறுகையில், ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய குவாட் நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடையை விதித்துள்ளன.

ஆனால் குவாட்டில் ஒன்றான இந்தியா தொடர்ந்து எந்த தடையையும் விதிக்காமல் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெயை வாங்கி வருகிறது. அது போல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்க இந்தியா மறுத்துவிட்டது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடையை விதித்ததால் ரஷ்யாவின் பண மதிப்பு சரிந்தது. சர்வதேச வர்த்தகமும் உயர் தொழில்நுட்ப சரக்கு வர்த்தகமும் கடுமையாக பாதித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் வலுவாக உள்ளது.

ஆனால் குவாட் நாடுகளில் ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்கவும் பதிலடி கொடுக்கவும் நடுங்குகிறது. நேட்டோவை பிளவுப்படுத்த முடியும் என ரஷ்ய அதிபர் புடின் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் நேட்டோ நாடுகள் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு இன்று வலுவானதாகவும் ஒற்றுமையாகவும் இருக்கிறது என்றார் பிடன்.

Recommended For You

About the Author: Editor Elukainews